Sports
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளது. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெறும் இந்தத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
பல நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியாவுடனான சில பிரச்சனைகள் காரணமாக வங்கதேச கிரிக்கெட் அணி பங்கேற்க மாட்டோம் எனவும், தங்களது போட்டிகள் அனைத்தையும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேசம் ஐசிசி க்கு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறிய ஐசிசி, வங்கதேச அணியை டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்தும் நீக்கியும், அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை சேர்த்தும் அதிரடி காட்டியது.
வங்கதேச அணியுடன் சேர்ந்தே முரண்டு பிடித்து வந்த பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்தது. பிறகு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.
தற்போது, பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆனால் இந்திய அணி உடனான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ஐசிசி காத்திருக்கும் வேளையில், குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் இந்த நிலைப்பாடு, விளையாட்டின் கொள்கைகளுடன் முரணாக உள்ளது என ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், “இது ஐசிசி போட்டிகளின் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு என்பது போட்டிகளின் உணர்வையும் நேர்மையையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.
தேசிய கொள்கை விஷயங்களில் அரசுகளின் பங்கை ஐசிசி மதித்தாலும், இந்த முடிவு உலக அணிகளின் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உட்பட உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல. இந்த முடிவு உலக கிரிக்கெட் சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடும் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சொந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் என்று ஐசிசி நம்புகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐசிசியின் தற்போதைய முன்னுரிமை, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஆகும். இது பாகிஸ்தான் அணி உட்பட ஐசிசியின் அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும், விதம் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆராயும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவில்லையெனில், ஐசிசி தரப்பில் இருந்து பாகிஸ்தான் அணி தனது வருவாயை பெருமளவில் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மீண்டும் தெளிவான ஒரு முடிவை எடுக்காமல், இந்திய அணியுடன் விளையாட மாட்டோம் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்தால், ஐசிசி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!