Sports
T20 உலகக்கோப்பைக்கு தயாரான வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா - தேர்வுக்குழு சொல்வது என்ன? : முழு விவரம்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான தொடரின் ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் அவர் நியூசிலாந்து உடனான டி20 தொடரில் விளையாடவில்லை. சிகிச்சையில் இருந்த வாஷிங்டன் சுந்தர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டு வருகிறார். வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு அவர் தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 11ம் தேதி பரோடாவில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு களத்தில் இருந்து விலகியிருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பெங்களூரில் உள்ள சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். ஐ.சி.சி போட்டிக்கு அவர் தயாராக மாட்டார் என கூற எந்தக் காரணமும் இல்லை என்று தேர்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா தனது டி20 உலகக் கோப்பைப் பயணத்தை மும்பையில், அமெரிக்காவிற்கு எதிராகத் தொடங்குகிறது. ஜனவரி 31ம் தேதியோடு முடிவடையும் நியூசிலாந்துக்கு எதிரான தற்போதைய இருதரப்பு டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி பிப்ரவரி 3ம் தேதி மும்பையில் விளையாடுகிறது. மேலும், பிப்ரவரி 4ம் தேதி டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. அந்த ஆட்டத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தயாராக இருப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இப்போதைக்கு, உலகக் கோப்பைக்கு அவர் தயாராகிவிடுவார் என்பதில் தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தற்போதைய டி20 தொடரில் இருந்து சுந்தரை நீக்கியபோது, "வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பந்துவீசும்போது, வாசிங்டன் சுந்தருக்கு இடது கீழ் விலா எலும்புப் பகுதியில் திடீரென வலி ஏற்பட்டது. அவருக்கு மேலும் ஸ்கேன்கள் செய்யப்படும், அதைத் தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழு நிபுணர்களின் கருத்தை கேட்போம் என அவர் காயமடைந்த பொது பிசிசிஐ தெரிவித்திருந்தது." அன்று முதல் அவர் சிறப்பு மையத்தில் இருந்து வருகிறார்.
இதற்கிடையில், திலக் வர்மாவைப் பற்றியும் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த திலக் வர்மா, பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்திற்குத் தயாராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடற்தகுதி குறித்து சமீபத்தில் ஒரு அப்டேட் வழங்கிய பிசிசிஐ, "திலக் வர்மாவுக்கு ஜனவரி 7ம் தேதி ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் நேற்று (ஜனவரி 29) காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், மேலும் இன்று ஹைதராபாத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் இருக்கிறார். திலக்கின் உடல் அறிகுறிகள் முழுமையாகக் குணமடைந்து, காயம் ஆறுவது திருப்திகரமாக இருந்தவுடன், அவர் பயிற்சியைத் தொடங்கி, படிப்படியாகத் தினசரி செயல்பாடுகளுக்குத் திரும்புவார்.” எனத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நியூசிலாந்து உடனான டி20 தொடரை தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் சிறப்பாகச் செயல்படாத போதிலும், அவரைப் பெரிய தொடருக்கான அணியில் சேர்ப்பது குறித்த விவாதங்கள் எழுந்தபோதும், தேர்வுக் குழு அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகிறது. உலகக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் நம்பிக்கையூட்டும் வகையில் செயல்படவில்லை.
தற்போதைய தொடரில் அவர் ஆடிய 4 போட்டிகளிலும் 10, 6, 0 மற்றும் 24 போன்ற ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், இருப்பினும் அவரை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு இஷான் கிஷன் அவரை முந்தக்கூடும், ஆனால் சாம்சனின் தற்போதைய இடம் பாதுகாப்பாக உள்ளது என கூறப்படுகிறது.
இருப்பினும், கில்லுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன், “ஷுப்மன் கில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும். ஷுப்மன் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் வீரர். அவர் டி20 அணியில் இருக்க வேண்டும். அவர் இல்லாதது இந்தியாவின் துரதிர்ஷ்டம். அவர் எனக்குப் பிடித்த வீரர், அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடும் ஒரு பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ளார்."
டி20 உலகக்கோப்பையில் பின்வரும் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதன்படி, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) ஆகியோர் உள்ளனர்.
நல்ல பார்மில் இருந்து வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் திடீரென காயமடைந்தது அதிர்ச்சியை கொடுத்தாலும், தற்போது அவர்கள் உடல் நலம் தேறி மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடல் 2.0-விற்கு மகுடம் சூட்ட போகும் பெண்கள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!