Sports

மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !

இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட்டுக்கு இணையாக கால்பந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும்ம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாக கால்பந்து இருக்கிறது என்று சொன்னாலும் அது தவறில்லை.

கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், போர்த்துக்கல் ஆகிய அணிகளுக்கு அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கதாநாயர்களாக கொண்டாடட்பட்டு வருகிறார்கள். கடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணி வென்றபோது அது கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கேரள ரசிகர்கள் அளித்த ஆதரவு அர்ஜென்டினா வரை எட்டியது. அதைத் தொடர்ந்து இதற்கு நன்றி செலுத்தும் விதமாக மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வரும் என தகவல் வெளியானது.

கேரளாவுக்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட வருமாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தை கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வருவதை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்தது.

இந்த நிலையில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, வரும் 2026 மார்ச்சில் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து போட்டியில் விளையாடும் என கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர் ரஹிமான் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு அணியிடம் இருந்து 2 நாட்களுக்கு முன் பெறப்பட்ட , இ-மெயிலில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடும் என்றும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த இ-மெயிலில் கூறப்பட்டிருந்தது. அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன"என்று கூறினார்.

Also Read: பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !