Sports
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் விளையாட்டு துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்தி, செஸ் ஒலிம்பியாட், ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் ட்ரோபி ஹாக்கி போட்டிகள் என பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு WTA 250 சிறப்பாக சென்னையில் நடத்தப்பட்டது. இதற்கென தமிழ்நாடு அரசு ரூபாய் 12 கோடி நிதி உதவி அளித்து போட்டி சிறப்பாக நடத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை, நுங்கம்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் விளையாட்டரங்கில் மீண்டும் உலகத் தரத்திலான சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் WTA 250 போட்டி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்த சர்வதேச தரவரிசை கொண்ட சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் 27.10.2025 முதல் 02.11.2025 வரை நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டிகளில், முதல் நான்கு சுற்றுகளுக்கு பிறகு, ஒற்றையர் பிரிவில், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஜானிஸ் ஜென் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கிம்பர்லி பிரல் ஆகியோர் இறுதி போட்டியில் விளையாடினர். இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜானிஸ் ஜென் வெற்றி பெற்றார்.
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் கோப்பைகள் வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!