Sports

சிறிய வயதில் உதவிய நிறுவனத்தை மறக்காத தோனி : நட்சத்திரமானதும் செய்த கைமாறு... நெகிழ்ந்த உரிமையாளர் !

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். அவர் குறித்து வெளியான "MS தோனி (The Untold Story )" என்ற படத்தில் அவர் கிரிக்கெட்டில் போதிய வாய்ப்பு கிடைக்காத தருணத்தில் அவரின் நண்பர் ஒருவர் ஒரு நிறுவனத்தை அணுகி தோனிக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய வேண்டுகோள் விடுத்ததை போலவும், அதனை முதலில் மறுத்த அந்த நிறுவனம் பின்னர் தோனிக்கு ஸ்பான்சர் செய்ததைப் போலவும் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்த நிலையில், திரைப்படத்தில் வந்த அந்த காட்சி உண்மையில் நடந்தது என்றும், தான் கிரிக்கெட்டில் நட்சத்திரமாக வளர்ந்த பின்னர் தோனி எந்தவித பணமும் வாங்காமல் அந்த நிறுவனத்துக்கு உதவியதையும் அந்த நிறுவனத்தின் தலைவர் தற்போது கூறியுள்ளார். BAS என்ற நிறுவனம் விளையாட்டு உபகரணங்களை தயாரித்து வருகிறது.

அந்த நிறுவனமே இளவயதில் தோனிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது. அதனை நினைவில் வைத்திருந்த தோனி, 2019 உலகக் கோப்பைக்கு முன்பாக அண்ட் நிறுவனத்தை அணுகி ,எந்தவிதமான பணமும் பெற்றுக்கொள்ளாமல் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை பேட்டில் பயன்படுத்தியுள்ளார். அப்போதைய சூழலில் தோனியின் பேட்டில் தங்கள் நிறுவனத்தின் ஸ்டிக்கர் இடம்பெற பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்ட தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

BAS நிறுவனத்தின் உரிமையாளர் சோமி கோலி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் மூலம் தோனி செய்த இந்த செயல் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே தோனியை புகழ்ந்து வந்த தோனியின் ரசிகர்கள் இந்த சம்பவம் தெரியவந்த பின்னர் அவரை மேலும் கொண்டாடி வருகின்றன

Also Read: குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா இடத்தை இந்த தமிழ்நாடு வீரர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர் கணிப்பு !