Sports

Under 19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்த இந்தியா - மீண்டும் தொடரும் ஏமாற்றம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் தொடரில் இருந்து தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதே நேரம் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி தொடர்ச்சியாக 5 வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அதில் இரு முறை தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரம் இந்திய அணி அதிகபட்சமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை 5 முறை வென்றுள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு தோல்வியே சந்திக்காமல் வந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. அதே போல இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்து ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "பும்ரா வெறித்தனமாக பந்துவீசுகிறார்" - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் புகழாரம் !