Sports

“இங்கிலாந்தின் BazBALL அணுகுமுறை எனக்குதான் வாய்ப்பு” - டெஸ்ட் தொடர் குறித்து பும்ரா பேச்சு !

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தபோது, bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது.இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து பாஸ்பால் அணுகுமுறையைப் பயன்படுத்தினால் அந்த டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளைக் குவிப்பேன் என்று இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்தின் 'பாஸ்பால்' அணுகுமுறை உற்சாகமாக இருக்கிறது. இதனால் பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் வீழ்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது.அவர்கள் ரன்கள் எடுக்க முயற்சிக்கும் போது வழக்கத்தை விட பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும். இதனால் நமது அணி பந்துவீச்சாளர்களால் வெற்றி பெற முடியும்.

'பாஸ்பால்' அணுகுமுறையை இங்கிலாந்து அணியினர் வெற்றிகரமாக பயன்படுத்துகின்றனர். டெஸ்ட்டை இப்படியும் ஆட முடியும் என்று காட்டுகிறார்கள். ஒரு பந்துவீச்சாளராக இந்த அணுகுமுறை என்னைப் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புதான். அவர்கள் வேகமாக விளையாடுவதன் மூலம் என்னைக் களைப்படையச் செய்ய மாட்டார்கள். அதனால் நான் விக்கெட்டுகளைக் குவிப்பேன். இருப்பினும் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கான பாராட்டுக்கள் இங்கிலாந்தை சேரும்"என்று கூறியுள்ளார்.

Also Read: "அவர் இளம்வீரர், அவருக்கு இன்னும் சிறிது காலம் கொடுக்கவேண்டும்" - ராகுல் டிராவிட் கருத்து !