Sports

"அந்த புகைப்படத்தில் எதுவுமே இல்லை, அவ்வளவுதான்"- உலககோப்பையில் கால் வைத்தது குறித்து ஆஸ்.வீரர் கருத்து !

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் வென்ற பிறகு வழங்கப்பட்ட உலகக்கோப்பையை வைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஏராளமான புகைப்படங்கள் எடுத்தனர். அதில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பையின் மேல் தனது கால்களை நீட்டியபடி இருந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏராளமானோர் அதனை விமர்சித்திருந்த நிலையில், பலர் மிட்செல் மார்ஷ்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தனர். தொடர்ந்து உலகக்கோப்பையின் மேல் தனது கால்களை நீட்டி ரசிகர்களை அவமதித்ததாக மிட்செல் மார்ஷ் மீது உத்தரபிரதேச காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பையில் கால்களை வைத்த விவகாரம் குறித்து முதல் முறையாக மிட்செல் மார்ஷ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " உலகக்கோப்பையை நான் எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை. புகைப்படத்தில் அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை. சமூகவலைதளங்களில் அந்தப் புகைப்படம் வைரலானதாக பலரும் சொன்னாலும் அதை பற்றி நான் பெரிதாக எதுவும் சிந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரை அந்தப் புகைப்படத்தில் எதுவுமே இல்லை, அவ்வளவுதான்" என்று கூறியுள்ளார்.

Also Read: "பிணைக் கைதிகளை விடுவிக்கிறோம் என்றோம், ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை" - ஹமாஸ் அமைப்பு குற்றச்சாட்டு !