Sports

Knowledgeable Crowd : "சென்னை ரசிகர்கள் அற்புதமானவர்கள்" - புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர் !

இந்தியாவின் புகழ்பெற்ற மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனி இடம் எப்போதும் உண்டு. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றிபெற்றது.

முதலில் இந்தியா தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் அடுத்த கணமே சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர்.மைதானம் முழுக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கரகோசங்கள் எழுந்தது. இந்தியாவுக்குள் தங்களுக்கு இந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள், சென்னை ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்து மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டனர்.

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியிலும் சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என இரண்டு அணிகளையும் ஆதரித்தனர். சென்னை அணி ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் போட்டி முடித்த பின்னர் சேப்பாக்கம் மைதானத்தை வளம் வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற தென்னாபிரிக்க வீரர் ஷம்சி தனது எக்ஸ் வலைதளப்பதிவில் "முதன்முறை சென்னையில் விளையாடுகிறேன். இந்த சிறப்பான போட்டியில் நான் பங்கெடுத்தது மகிழ்ச்சி. சென்னை ரசிகர்கள் அற்புதமானவர்கள். இரு அணிகளுக்கும் ஆதரவளித்தார்கள். மேலும் இரு அணியிலும் யார் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ஆதரவளித்தார்கள். நன்றி" என்று கூறியுள்ளார்.

பொதுவாக சென்னை ரசிகர்கள் Knowledgeable Crowd என அழைக்கப்படுவர். அதற்கு முக்கிய காரணம், சொந்த நாட்டு அணி, பிற அணிகள் என்று பார்க்காமல், சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கும், அணிகளுக்கும் ஆதரவு அளிப்பார்கள். இந்த உலகக்கோப்பை தொடரிலும் சென்னையின் அந்த சிறப்பான பாரம்பரியம் தொடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: INDvsPAK : மதவாத கோஷம்.. விளையாட்டிலும் குஜராத் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !