Sports
இது தமிழ்நாடு, குஜராத் அல்ல ! வேற்றுமையை கடந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சென்னை ரசிகர்கள் !
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி குஜராத் ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமெழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், #Sorry_Pakistan என்ற ஹாஸ் டாக் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.
இந்த சம்பவத்துகு தென்னிந்தியாவில் இருந்து அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் சென்னை வரும்போது அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது.
இந்த போட்டிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகளவில் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்த இந்திய ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தந்தனர். அவர்களிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டியெடுத்தபோது, அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு நடந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து நாங்கள் பாகிஸ்தானை ஆதரிப்போம் என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அஹமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ஜெர்சியை கூட வாங்க முடியவில்லை. ஆனால், இங்கு ஏராளமான உள்ளூர் ரசிகர்கள் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து வந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தெற்கு எப்போதும் தெற்குதான் என கூறினார்.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாபர் ஆஸம் ஆட வந்த போது சென்னை ரசிகர்கள் பாபர் பாபர் என்று கூறி அவரை வரவேற்று கொண்டாடினர். அதே நேரம் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான செயல்பட்டபோது அந்த அணியையும் சென்னை ரசிகர்கள் பாராட்டினர். சென்னை ரசிகர்களின் இந்த செயலை பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!