Sports

ஆசிய விளையாட்டு தொடர் : ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்.. குண்டு எரிதலில் அசத்திய தஜிந்தர்பால் சிங் !

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கிய சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சீரான அளவில் பதக்கங்களை வென்று வந்தது. அதிலும், மகளிர் கிரிக்கெட், ஸ்குவாஷ், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் 6 தங்கம், 8 வெள்ளி , 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. காலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 50 மீ டிராப் பிரிவில் தமிழ்நாடு வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது.

அதனைத் தொடர்ந்து தடகளப் போட்டியின் 3,000 மீட்டர் Steeplechase பிரிவில், இலக்கை 8 நிமிடம் 19.54 வினாடிகளில் கடந்து இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.

பின்னர் மாலை நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் 20.36 மீட்டர் தூரம் எரிந்து இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இவர் கடந்த ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா இதுவரை 13 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களோடு இந்தியா 4-ம் இடத்தில் தொடர்ந்து வருகிறது.

Also Read: "அஸ்வினுக்காகவே இந்திய பிட்ச்கள் உருவாக்கப்படுகிறது" - தமிழ்நாடு முன்னாள் வீரரின் கருத்தால் சர்ச்சை !