Sports

"உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நடுவரிசைக்கு பொருத்தமானவர் இவர்தான்"- இளம்வீரை குறிப்பிட்ட அஸ்வின் !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் நடுவரிசை வீரர்களான கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்றோர் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதில் சாம்சன், இஷான் கிஷன், சூரியகுமார் போன்றோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டுவரும் திலக் வர்மா அந்த இடத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என இந்திய அணி வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை போட்டி "மிகவும் அதிகமாக இருக்கும்.

எனவே நமக்கு சரியான பேக்கப் பிளேயர்கள் தேவை. சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் திலக் வர்மா ஒரு இடதுகை வீரராக இருக்கிறார். இந்தியாவுக்கு இடது கை ஆட்டக்காரர்கள் இப்போது குறைவு. ஏழாம் இடத்தில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். ஆகவே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யலாம்"என்று கூறியுள்ளார்.