Sports

பிரதமரின் நேரடி தலையீடு.. ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற வங்கதேச கேப்டன்.. ரசிகர்கள் மகிழ்ச்சி !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

அதன்பின்னர் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகிவரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனும் , சீனியர் நட்சத்திர வீரருமான தமீம் இக்பால் ஓய்வை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்திய புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சமயத்தில், முக்கிய வீரர் ஓய்வை அறிவித்தது வங்கதேச அணியில் பிரச்சனை இருப்பதை உறுதி செய்தது.

மேலும், தமீம் இக்பாலுக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சேர்மன் நஸ்முல் ஹசனுக்கும் மோதல் போக்கு இருந்தது என்றும், இதனால்தான் தமீம் இக்பால் ஓய்வை அறிவித்தார் என்றும் வங்கதேச மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனிடையே அவர் ஓய்வு பெற்றது உணர்ச்சி மிகுதியில் எடுத்த முடிவு என பங்களாதேஷ் கிரிக்கெட் சேர்மன் நஸ்முல் ஹசன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வங்கதேச பிரதமர் சேக் ஹசினா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். மேலும், இது குறித்து நேரில் வந்த பேசுமாறு அவர் தமீம் இக்பாலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதன்படி தமீம் இக்குபால் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது அணியில் அவரின் முக்கியத்துவம் குறித்தும், அவர் ஆடுவது நாட்டுக்கு எத்தனை முக்கியமானது என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமீம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வங்கதேச ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: "திலக் வர்மா இந்திய அணியில் எதற்கு ? அவருக்கு பதில் இவரை எடுத்து இருக்கலாம்" - முன்னாள் வீரர் காட்டம் !