Sports

"எனது கனவு நனவானது,, இதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி " -கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி !

தமிழக வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.

பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம்பிடிப்பார் என கூறப்பட்ட நிலையில், இந்த தொடரிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

கிராம பின்னணியில் இருந்து இந்திய அணிவரை உயர்ந்த நடராஜன் தனது சுற்றுவட்டார மக்களுக்காக தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த மைதானம் திறக்கப்படவுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறியுள்ளார். இந்த திறப்பு விழாவில், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன், நடிகர் யோகி பாபு மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அமேசான் காடுகளில் காணாமல் போன சிறுவர்கள்.. 40 நாட்களுக்கு பின்னர் உயிரோடு மீட்பு.. நடந்தது என்ன ?