Sports

"BCCI கோலிக்கு அநீதி இழைத்துவிட்டது.. அவரை இப்படி நடத்தியிருக்க கூடாது" -ஆஸ். முன்னாள் வீரர் காட்டம் !

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.

கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். அதோடு கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியின் பறிக்கப்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 3 வகை போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றுவரும் நிலையில், வர்ணனை செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் பிசிசிஐ விராட் கோலிக்கு அநியாயம் செய்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " என்னை பொறுத்தவரை பிசிசிஐ விராட் கோலிக்கு அநியாயம் செய்து விட்டது.

ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள கோலி விரும்பியிருந்தால் அவர் இந்திய அணிக்கு செய்த சாதனைகளை எண்ணி மரியாதை நிமித்தமாக அவரை தொடர அனுமதிக்க வேண்டும். ஆனால் அவரின் கேப்டன் பதவியை பறித்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது. களத்தில் விளையாடும்போது விராட் கோலி காட்டும் ஆக்ரோஷம் எனக்கு பிடிக்கும்.கோலியிடம் எனக்கு பிடிக்காதது என்று எதுவும் இல்லை. அவரது ஆக்ரோஷம், அவரது ஆர்வம், அவரது பேட்டிங் எல்லாமே பிடிக்கும். அவர் ஒரு அற்புதமான கேப்டன்" என்று கூறியுள்ளார்.

Also Read: 'மனுஸ்மிருதியை படிக்கவும்': 17 வயது சிறுமி கருக்கலைப்பு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அதிர்ச்சி கருத்து!