Sports

தமிழக வீரரின் திறமையை வீணாக்கிய குஜராத் அணி. ஹர்திக் பாண்டியாவின் சுயநலமே காரணம் என ரசிகர்கள் விமர்சனம் !

கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை ஆடினர். அதிலும், இவர்கள் அதிரடியால் தமிழ்நாடு அணி அருணாச்சலபிரதேச அணிக்கு எதிராக உலகசாதனை படைத்தது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலபிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தமிழ்நாடு அணி சார்பில் களமிறங்கிய தொடக்கவீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் அருணாச்சலபிரதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஆட்டம் முழுக்க சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறந்தது. தொடக்கவீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அதிரடி சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் தர 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலகசாதனையை தமிழ்நாடு அணி படைத்தது. இந்த தொடரில் ஜெகதீசன் 5 சதங்களோடு 830 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். அதேபோல மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் 3 சதங்களோடு 610 ரன்கள் குவித்து 3ம் இடம் பிடித்தார்.

அதன்பின்னர் ரஞ்சி தொடரின் முதல் போட்டியிலும் சாய் சுதர்சன் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றனர். இது தவிர ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி சாய் சுதர்சனை தக்கவைத்த நிலையில், இந்த சீசனில் அவரை அந்த அணி நன்கு பயன்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது. அதனைப் நன்கு பயன்படுத்திய சாய் சுதர்சன் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், சிறப்பாக ஆடியும் திடீரென சாய் சுதர்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் தமிழக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது வரை குஜராத் அணிக்காக 6 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள சாய் சுதர்சன் 2 அரை சதங்களுடன் 223 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதோடு 3 போட்டிகளில் அந்த அணி வெல்ல முக்கியக் காரணமாகவும் இருந்துள்ளார். ஆனாலும், இப்படிப்பட்ட வீரரை குஜராத் அணி தொடர்ந்து பயன்படுத்தாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு குஜராத் அணிக்காக 3-வது வரிசையில் சாய் சுதர்சன் களமிறங்கிய நிலையில், அந்த வரிசையில் திடீரென களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாய் சுதர்சனை வெளியே அமரவைத்தார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை விட சாய் சுதர்சன் அதிக சராசரி வைத்துள்ள நிலையில், அவரின் இந்த முடிவால் தனது சுயநலத்துக்காக நல்ல வீரரை வீணாகி வருகிறார் என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: தோனி கூறியதுதான் சரி, மலிங்கா கூறியது தவறானது - இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் கருத்து !