Sports

சூனியக்காரி,, ஊரை கெடுக்காதே.. கேலி செய்த கிராமம்.. உலககோப்பையை வென்று பதிலடி கொடுத்த வீராங்கனை !

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது மகளிர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணியினர் வென்று அசத்தினர். இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தி அர்ச்சனா தேவி (18) என்பவர் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த நிலையில், தற்போது இவர் தான் இந்த இடத்துக்கு வந்ததற்காக பெற்ற கஷ்டங்களை இவரின் சகோதரர் ரோஹித் பகிர்ந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ரதாய் புர்வா என்ற கிராமத்தை சேர்ந்த இவர், 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கான்பூர் கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி பெற்றுள்ளார். ஆனால் அங்கு சென்று வர போதிய வசதி இல்லாததால் அவரது பள்ளி ஆசிரியர் பூனம் குப்தா என்பவர் கான்பூரில் அறையெடுத்து தங்க உதவி செய்துள்ளார்.

சிறுவயதில் புற்றுநோய் காரணமாக அர்ச்சனாவின் தந்தை உயிரிழந்த நிலையில், கிரிக்கெட் விளையாடும்போது இவர் அடித்த பந்தை எடுக்கச்சென்ற இவரின் சகோதரரும் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.

மேலும், ஒரு பெண் கிராமத்தில் வீட்டில் அடைந்துகிடக்காமல் விளையாட சென்றதால் அவரது கிராமத்தின் இவரை சூனியக்காரி போன்ற மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளனர். மேலும், இவரால் கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்று கூறியதோடு, அவர் சாலையில் நடந்துவந்தாலே கிராமத்தினர் விலகி செல்லும் அளவு மோசமான நடத்தப்பட்டதாகவும் அர்ச்சனாவின் சகோதரர் கூறியுள்ளார்.

ஆனால், இவர் இந்திய அணியில் இடம்பெற்று உலகக்கோப்பை அணிக்கு தகுதி பெற்றதும் கிராம மக்கள் பலரும் இவரின் வீட்டுக்கு வந்து இவரது தாயாருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். மேலும், உலகக்கோப்பையை வென்றதும் தினசரி ஏராளமானோர் இவரின் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும், இப்படி பிள்ளையை பெற தவம் செய்திருக்க வேண்டும் என தற்போது தாயாரை பலர் புகழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Also Read: இது OLA பரிதாபங்கள் : பார்ட் பார்ட்டாக ரோட்டில் கழண்டு விழுந்த e-ஸ்கூட்டர் - என்ன நடந்தது ?