Sports
"சூரியகுமார் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுகிறார்" -இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் விமர்சனம் !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசியுள்ளார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில், சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுகிறார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்துமே வித்தியாசமான வடிவங்களாகும். இங்கு யாராவது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஒரே மாதிரியானது என்று சொன்னால் அது நிச்சயமாக உண்மையல்ல.
டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் அபாரமான ஃபார்மில் உள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை அவர் அசத்தவில்லை. குறிப்பாக கடந்த 16 – 17 இன்னிங்சில் அவர் வெறும் 2 அரை சதம் மட்டுமே அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்படுகிறார். பந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசைக்கு சற்று வெளியே பிட்ச்சாகி வரும் போது அவர் தடுமாறுகிறார். எனவே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசைக்கு அருகில் வரும் பந்துகளை அவர் சிறப்பாக எதிர்கொள்ள வேலை செய்ய வேண்டும். இதனால் அவரை அவுட்டாக்க பவுலர்கள் ஆஃப் ஸ்டம்ப் திசையில் தான் வீசுவார்கள். ஏனெனில் அங்கே தான் அவருடைய வீக்னஸ் உள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!