Sports

மெஸ்ஸி அணியின் வெற்றி கொண்டாட்டம்.. துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்.. மணிப்பூரில் சோகம் !

22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றைய முன்தினம் கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.

அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.

90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.

உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் இந்த வெற்றி கொண்டாட்டம் நிகழ்ந்து வருகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜமேய் வாங்மா பீகாபதி பகுதியில் அர்ஜென்டினாவில் வெற்றி கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் ஒருவர் வெடி வெடித்து கொண்டாடினர். அதோடு துப்பாக்கி சூடும் நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டில், அந்த பகுதியில் டயர் கடை வைத்திருக்கும் லஷ்ராம் பிர்மானி என்ற நபரின் மனைவி லைஷ்ராம் ஓங்பி இபெடோம்பி (50) என்பவர் மீது குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறை தரப்பில், "சம்பவம் நடந்த அன்று இரவு அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் துப்பாக்கியையும் பயன்படுத்தி கொண்டாடி வந்தனர். அப்போது எதிர்பாரா விதமாக இபெடோம்பி என்ற பெண்ணின் முதுகில் அந்த குண்டு துளைத்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வால் அப்பகுதி வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அளித்த வாக்குறுதியின் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போல் கேரளாவின் கொல்லம் பகுதியில் வெற்றி கொண்டாட்டத்தின்போது 17 வயது சிறுவன் ஒருவன் கூட்டத்தின் நெருக்கத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: FIFA 2022 : மெஸ்ஸி அணியின் வெற்றி.. கேரளாவின் பிரியாணி கொண்டாட்டம் முதல் இறப்பு வரை !