Sports
ஓய்வு முடிவை திரும்பப் பெற்றாரா மெஸ்ஸி ? உலகக்கோப்பையை வென்றதும் அவர் கூறியது என்ன?
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் நேற்றிரவு கத்தாரின் லுசைல் ஐகானிக் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
முதல் 70 நிமிடம் ஆடுவது பிரான்ஸ் அணிதானா என்ற கேள்வி எழும் வகையில் அந்த அணி மிகமோசமாக ஆடியது. அர்ஜென்டினாவில் அதிரடிக்கு முன்னர் பிரான்ஸ் அணியால் நிற்கவே முடியவில்லை. ஆனால், அதன்பின்னர் இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.
அரையிறுதி போட்டி முடிந்த பின்னர் பேசிய மெஸ்ஸி, " இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தார். இதனால் இந்த வெற்றியோடு அவர் ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி, "உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன். என் வாழ்க்கையில் உலகக் கோப்பையைத் தவிர எல்லாப் போட்டிகளையும் வென்றது என் அதிர்ஷ்டம். இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு எடுத்துச் சென்று அனைவர் முன்னிலையிலும் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் போகிறேன்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. .
Also Read
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!