Sports

36 ஆண்டுகால நிறைவேறாத கனவை மெய்ப்பிப்பாரா மெஸ்ஸி.. உலகமே எதிர்நோக்கும் நாயகனின் வெற்றி !

27 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் அணியின் ஏக்கம் 2011ல் எப்படி சாத்தியமானதோ, அதேபோல், உலக கால்பந்து அரங்கில் 36ஆண்டுகால அர்ஜெண்டினாவின் கோப்பை ஏக்கத்தை மாயாஜால மன்னன் மெஸ்ஸி கையில் ஏந்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது கால்பந்து வாழ்க்கையை உலகக்கோப்பையோடு விடைகொடுக்க காத்திருக்கும் மெஸ்ஸி மீது பிரபஞ்சத்தை கடந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

---

மெஸ்ஸி. கால்பந்து உலகில் இந்த பெயர் எவ்வளவோ பட்டங்களை சூடினாலும், உலக கோப்பை என்ற பிரபஞ்சத்தின் உச்சபட்ச மகுடத்தை சூட தீரா ஏக்கத்துடன் காத்திருக்கின்றது. 21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக களத்தில் கம்பீரத்தோடும், ஜாம்பவானாகவும் வலம் வரும் மெஸ்ஸி என்னும் மாயாஜால மன்னனுக்கு கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியே கடைசி போட்டி.

ஆம், கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, நடப்பு சாம்பியன் பிரான்ஸை எதிர்த்து வரும் 18ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் தற்போது மெஸ்ஸியின் பக்கம் திரும்பியுள்ளது என்று குறிப்பிடலாம். தேசத்திற்காக 5முறை உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, பல சாதனைகளை இந்த ஒரே உலகக்கோப்பையில் அரங்கேற்றியதோடு, அணியின் கூட்டு முயற்சியுடன் இறுதிப்போட்டியிலும் கால்பதித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரருக்கு வழங்கப்படு கோல்டன் பூட் ரேசில் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் மரடோனாவின் கோல் சாதனையை முறியடித்த மெஸ்ஸி, அவரது பாதையில் உலகக்கோப்பை சாதனையையும் கைப்பற்றி வரலாற்றை திருத்தி எழுத காத்திருக்கிறார்.

35 வயதாகும் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை. இந்த போட்டியுடன் தான் ஓய்வு பெற போவதாக மேஜிக் மன்னனும் அறிவித்து விட்டார். இந்த தருணத்தில், உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனையுடன் மெஸ்ஸி விடைபெற வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

மெஸ்ஸி களத்தில் இருந்தால் ரசிகர்களின் கரவோசையில் களம் அதிரும். மெஸ்ஸியை தாண்டி அவரிடம் இருந்து பந்தை பாஸ் செய்ய எதிரணி வீரர்கள் படும் பாடை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எதிரணி வீரர்களை லாவகமாக ஏமாற்றி இரு கால்களாலும் பந்தை கடத்தி கொண்டு கோல் போடுவதில் அசாத்திய மன்னன். ஆகையால், இறுதிப்போட்டியில் மெஸ்ஸியை கையாளுவதற்கென்றே எதிரணி வீரர்கள் தனியாக வியூகம் வகுக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மெஸ்ஸி விளையாடுவது இது 2வது முறையாகும். 2014 உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜெண்டினா தோற்றிருந்தது. இந்நிலையில், 2வது முறையாக உலகக்கோப்பை இறுதியில் விளையாடும் மெஸ்ஸி, தன் மாயாஜால கால்களால், மேஜிக் கோல்களை அரங்கேற்றி கோப்பையுடன் விடைபெறுவாரா என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அர்ஜெண்டின அணியை பொறுத்தவரை 1978, 1986ஆம் ஆண்டுகளில் கோப்பை வென்றிருந்தது. மரடோனா வழியில் 36ஆண்டுகளுக்கு பிறகு அணியின் கோப்பை ஏக்கத்தை மெஸ்ஸி தீர்க்க வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் பிரார்த்தனை.

கோப்பை வென்று வரலாற்றை மெஸ்ஸி திருத்தி எழுதும் பட்சத்தில், சமகால ஜாம்பவான்களில் தனக்கென தனி முத்திரையை பதிப்பதோடு, எதிர்கால மெஸ்ஸிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வார்.

2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்று எப்படி சச்சினை வழியனுப்பினார்களோ, அதேபோல், 2022 உலகக்கோப்பையை அர்ஜெண்டினா வென்று மெஸ்ஸியை உணர்வு பூர்வமான தருணத்துடன் வழியனுப்ப காத்திருக்கின்றது கால்பந்து களம்.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்திற்கும், அவரை பற்றிய பிரம்மிப்பான பதிவுகளுக்கும் வரும் 18ஆம் தேதி கோலால் விடை கொடுக்க காத்திருக்கிறார் மெஸ்ஸி.

- மீனா.

Also Read: "இந்தியாவை தோற்கடித்தபின்னர் எங்களிடம் யாரும் காசே வாங்கவில்லை" -நினைவலைகளை பகிர்ந்த பாக்.வீரர் ரிஸ்வான்!