Sports

இந்திய பந்துவீச்சை அடித்து துவைத்து காயப்போட்ட நியூஸிலாந்து.. வில்லியம்சன் -லதம் ஜோடி அபாரம்!

உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான்-சுப்மன் கில் களமிறங்கினர்.

சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 124 ரன்கள் குவித்திருந்தபோது பிரிந்தது. கில் 50 ரன்களுடனும் தவான் 72 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பண்ட் 15 ரன்களுக்கும், சூரியகுமார் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் நடுஓவர்களில் இந்திய அணி தடுமாறிய நிலையில், சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

பின்னர் 36 ரன்கள் எடுத்து சாம்சன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடி ஆட்டம் ஆடினார். 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அவர் அணியை 300 ரன்களை கடக்க உதவினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் 307 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணியை வில்லியம்சன் -லதம் இணை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றது. இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இந்த ஜோடி தங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தது. நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்த அணி ஷாப்பில் லதம் 145 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Also Read: #FIFAWorldcup - குறிவைத்து தாக்கிய எதிரணி.. காயமடைந்து வெளியேறிய நெய்மர்.. என்ன செய்யப்போகிறது பிரேசில் ?