Sports

இந்த நாட்டில் உலககோப்பை நடத்த அனுமதி கொடுத்தது ஏன்? கத்தார் நாட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. காரணம் என்ன?

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ம் தேதி கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கவுள்ளது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

மேலும், இந்த தொடருக்கான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் சுரண்டலுக்கு ஆளானதாகவும்,அதில் பலர் போதிய பணி பாதுகாப்பு இல்லாமல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு மனித உரிமைகளை மதிக்காத நாட்டில் உலகக்கோப்பையை நடத்தக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், உலகக்கோப்பைக்காக பல்வேறு நாட்டின் ரசிகர்களும் கத்தார் வந்துள்ள நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மதுபானம் அவர்களின் தினசரி செயல்பாட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஆனால் தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மைதானத்தில் மட்டும் மது இல்லாத பீர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் தனி வரி விதிக்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டினர் அனைவரும் பொது இடங்களுக்குச் செல்லும்போது தோள் மற்றும் முழங்காலையும் மறைக்க வகையில் அடைய அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆபாசப் படங்கள், செக்ஸ் டாய்களை கத்தாருக்குள் இறக்குமதி செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திருமணமாகாத ஆண், பெண்கள் ஒரே அறையில் தங்க அதிசயக்கதக்க வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட ரசிகரும் கண்காணிக்கப்படுவர் என்றும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.