Sports

"இனி கால்பந்தே விளையாடமாட்டேன்" -இந்திய அணியின் இளம் வீரர் அதிரடி அறிவிப்பு.. காரணம் என்ன ?

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ம் ஆண்டு தனது 19-வது வயதில் இந்திய அணிக்கு தேர்வானார். அதைத் தொடர்ந்து இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்றுவந்த அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறனை நிரூபித்து வந்துள்ளார்.

அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாகூரோடு இணைந்து இக்கட்டான தருணத்தில் அவர் அடித்த அரைசதம் அந்த தொடரையே இந்திய அணியின் பக்கமாக திரும்பியது. அதன் பின்னர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அவர் அடித்த 85 ரன்களும் தொடர்ந்து அகமதாபாத்தில் அவர் அடித்த 96 ரன்களும் அவரை அணியில் அசைக்க முடியாத வீரராக மாற்றியது.

ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள் அணியில் அவரின் இடத்தையே கேள்விக்குறியாக்கியது. அணியில் அவர் இடம்பெறுவதும் பின்னர் காயம் காரணமாக வெளியேறுவதுமாகவே அவரின் கடந்த 2 ஆண்டு கிரிக்கெட் பயணம் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து அணியில் இணைந்த அவர் நியூஸிலாந்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பொழுதுபோக்குக்காக அணி வீரர்கள் கால்பந்து விளையாடும்போது அதில் பங்கேற்காமல் வாஷிங்டன் சுந்தர் ஒதுங்கியே இருந்துவந்தார்.

அது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கான காரணத்தை வாஷிங்டன் சுந்தர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " 5, 6 வருடங்களுக்கு முன்பு ஒரு முக்கியமான சுற்றுப்பயணத்துக்கு முன்பு நான் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டபோது என்னுடைய கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இனிமேல் என் வாழ்க்கையில் ஒருபோதும் கால்பந்து விளையாடக் கூடாது என அப்போது உறுதியெடுத்துக் கொண்டேன். அதன்படி இப்போதுவரை நடந்து வருகிறேன். கால்பந்து விளையாட்டில் ஈடுபடுவதற்குப் பதிலாக வேறு பயிற்சிகளில் ஈடுபடலாம்" என்று கூறியுள்ளார்.

Also Read: "இவருக்கு இந்திய அணியின் நடுவரிசையில் இடமில்லை"-ரிஷப் பந்த் குறித்து வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக்