Sports

உலகக்கோப்பை T20-யின் அரசன் .. தென்னாபிரிக்க அணியுடனாக போட்டியில் மைல்கல்லை எட்டுவாரா கிங் கோலி ?

ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இனி இந்திய அணி அவ்வளவுதான் என நினைக்கும்போதுதான் அந்த மாயம் நடந்தது. ஆட்டத்தின் 11 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 54 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. 9 ஓவர்களில் 106 ரன்கள் எடுக்கவேண்டும். இந்த கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 989 ரன்கள் அடித்துள்ளார்.

விராட் கோலி இன்னும் 11 ரன்கள் அடித்தால் டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெறுவுள்ள நிலையில், அடுத்த போட்டியில் அந்த சாதனையை படைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிக்கு முன்னதாக இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே டி20 உலகக் கோப்பையில் 31 போட்டிகளில் மொத்தம் 1016 ரன்கள் எடுத்துள்ளார்.

இது தவிர 111 சர்வதேச டி20 போட்டிகளில் 3856 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரராக கோலி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 144 போட்டிகளில் 3794 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா இருக்கறார்.

Also Read: ராஜஸ்தான் :பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்.. வெளியே தெரிந்தால் அவமானம் என பெண்ணை வெளியேற்றிய பெற்றோர்!