Sports

"நான் சதம் அடித்திருக்கலாம்,, ஆனால் எனக்காக விளையாட மாட்டேன்" -ரசிகர்களை நெகிழ வைத்த இளம்வீரரின் பேச்சு !

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, 250 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. அணியின் டாப் ஆர்டர் வேகமாக சரிந்த நிலையில் சஞ்சு சாம்சன் (86 நாட் அவுட்), ஷ்ரேயாஸ் ஐயர் (50) ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அவர்களால் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 30 ரன்கள் தேவை என்றிருந்தபோது, தப்ராய்ஸ் ஷம்ஸி வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில், இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினர்.

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய இஷான் கிஷன், "இது எனது சொந்த மைதானம். பலரும் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பீல்டிங் செய்யும் பொழுது என்னிடம், 'இன்று நீ சதம் அடிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்கள். அதற்காகத்தான் நான் நிதானத்துடன் விளையாடினேன். துரதிஷ்டவசமாக சதத்தை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக இந்திய அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி."

நான் ஒற்றை ரன்னாக எடுத்து சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. அதைத்தான் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: வாடகைத் தாய்மை என்றால் என்ன?: இந்திய சட்டம் சொல்வது என்ன தெரியுமா?