Sports

கால்பந்து போட்டியில் கலவரம்.. ஆவேசமான ரசிகர்கள்.. பரிதாபமாக பலியான 127 பொதுமக்கள்.. நடந்தது என்ன ?

உலகின் பிரபலமான விளையாட்டு என்றால் அது கால்பந்துதான். உலகின் அனைத்து நாடுகளிலும் கால்பந்து விளையாட்டு வருகிறது. கால்பந்தில் ஐபிஎல் பாணியிலான கிளப் வகை போட்டிகள்தான் பிரபலமாக இருக்கின்றன.

அந்த வகையில் இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் கிளப் வகை போட்டி ஒன்று நடந்துகொண்டிருந்துள்ளது. இந்த போட்டியில் அரேமா FC அணியும் பெர்செபயா அணியும் மோதின. பரம வைரிகள் மோதும் இந்த ஆட்டத்துக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

இந்த போட்டியில் பெர்செபயா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆவேசமடைந்த அரேமா FC அணியின் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு வன்முறையில் ஈடுபடத்தொடங்கினர். இந்த கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் 127 பேர் பலியான நிலையில், 180க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கலவரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கியும், மிதிப்பட்டும் 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்து உள்ளனர். மேலும், 2 காவல்துறையினர் உள்ளிட்ட 93 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உள்ளூர் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கலவரத்தை போலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

மைதானத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் இந்த கலவரத்தில் எரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தோனேசிய கால்பந்து லீக் தொடர் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தோனேசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 4 வயது மகளை மீட்க கைக்குழந்தையோடு ஆற்றில் குதித்த தாய்.. நீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம் !