Sports

"பரவாயில்லை... அஸ்வின் தற்போது இதில் தேர்ச்சியடைந்துள்ளார் !" - இந்திய முன்னாள் வீரர் புகழாரம் !

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான இவர், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார்.

எட்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களமிறங்கிய அஸ்வின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான நிக்கோலஸ் பூரான் மற்றும் சிம்ரோன் ஹெட்மைர் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

முக்கிய வீரர்கள் இருவரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. அடுத்த இரு போட்டியிலும் சிறப்பாக வீசிய அவர் குறைந்த ரன்களையே விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் குறைந்த ஓவர் போட்டிகளிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை தேர்வாளர்களுக்கு அஸ்வின் நிரூபித்துள்ளார்.

இந்த டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி 6.66 மட்டுமே. இதைத் தொடர்ந்து அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னாள் வீரர் அஸ்வினை முன்னாள் இந்திய சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அஸ்வின் நன்றாக செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக டி20 லீக்குகளில் அஸ்வின் நன்றாக விளையாடி வருகிறார்.சஹால் அல்லது விக்கெட் எடுக்கும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் அஸ்வின் நல்ல தேர்வாக இருப்பார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் அவர் தேர்ச்சியடைந்துள்ளார். அதே நேரம் அவர் விக்கெட் எடுக்க முயற்சி எடுக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: தோழியோடு நெருங்கிய உறவு.. கண்டித்தும் கேட்காததால் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி !