Sports

"என் ஆட்டத்தை நினைத்து எனக்கே கோவம் வருகிறது" - இளம் இந்திய வீரர் விரக்தி ! காரணம் என்ன?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் கடைசி ஓவரில் வென்றது இந்திய அணி. அதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி கைவசம் இருக்கும்போது 2-0 என வென்றது. போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் நகரில் நடந்த அந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஷிகத் தவான் தலைமையிலான இந்திய அணி. ஷ்ரேயாஸ் ஐயர் (63 ரன்கள்), சஞ்சு சாம்சன் (54 ரன்கள்) மற்றும் அக்‌ஷர் படேல் (64* ரன்கள்) என மூன்று இந்திய வீரர்கள் சதம் அடிக்க 312 என்ற மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்தது இந்திய அணி. இளம் ஓப்பனர் சுப்மன் கில்லும் ஆரம்பத்தில் நல்ல இன்னிங்ஸ் ஆடினார். ஆனால் ஒரு மோசமான ஷாட்டால் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் அவர்.

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 53 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினார் கில். அந்தப் போட்டியில் விக்கெட்டுகளுக்கு நடுவே மோசமாக ஓடியதால் தன்னுடைய விக்கெட்டை இழந்தார் அவர். மிட்விக்கெட் திசையில் பந்தை அடித்த கில், ரன் அவுட் பற்றி சற்றும் யோசிக்காமல் உடனே சிங்கிளுக்கு ஆசைப்பட்டு ஓடத் தொடங்கினார். ஆனால் சிறப்பாக ஃபீல்டிங் செய்த நிகோலஸ் பூரண் டைரக்ட் ஹிட் மூலம் சுப்மன் கில்லை ரன் அவுட் செய்தார். ஸ்டம்புகள் தகர்க்கப்படும்போது கிரீஸிலிருந்து வெகுதூரம் வெளியே இருந்தார் கில்.

இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சி செய்தார் கில். ஆனால் அதை அவர் சரியாக டைமிங் செய்யவில்லை. அதனால் டாப் எட்ஜாகி பௌலரின் கைகளிலேயே தஞ்சமடைந்தது பந்து.

போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் மைதானத்தில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு பேசிய சுப்மன் கில், அவர் மீது அவரே கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அதிலும் முதல் ஒருநாள் போட்டியில் அவுட் ஆன விதம் தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறியிருக்கிறார் கில்.

"என் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கை என் தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அணியின் நம்பிக்கைக்கு ஏற்றதுபோல் நான் செயல்படவேண்டும். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தபோது என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் மிகவும் நம்பினேன். எனக்கு நல்ல தொடக்கும் கிடைத்தது.

அதைப் பயன்படுத்தி என் இன்னிங்ஸையும் கட்டமைத்தான். ஆனால், அந்த நல்ல தொடக்கத்தைப் பயன்படுத்தி என்னால் சதம் அடிக்க முடியவில்லை. அதிலும் நான் அவுட் ஆன விதத்தை நினைத்து எனக்கு மிகவும் கோவமாக இருக்கிறது" என்று சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார் சுப்மன் கில்.

Also Read: "உலககோப்பை நடப்பது ஆஸ்திரேலியாவில்,அங்கு இந்திய அணியில் நடராஜன் இருக்கவேண்டும்"-முன்னாள் வீரர் கருத்து !