Sports

“சதம் எடுத்தும் 14 போட்டியில் இடமில்லை.. என்னை வைத்து உலக சாதனை”: BCCI கடுமையாக விமர்சித்த முன்னணி வீரர்!

மேற்கு வங்கத்தை சேர்ந்த மனோஜ் திவாரி உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடியதால் கடந்த 2008-ல் இந்திய அணிக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 12 ஒருநாள் போட்டிகளிலும், 3 இருவது ஓவர் போட்டியிலும் இந்தியாவுக்கு ஆடிய அவர் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

அதிலும், சர்வதேச போட்டியில் சதம் அடித்த பிறகும் வாய்ப்பே கொடுக்காமல் அவர் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்திய அணிக்கு திருப்பிய அவர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.

பின்னர் உள்நாட்டு தொடர்களில் ஆடிய அவர் அங்கும் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும் பி.சி.சி.ஐ அவருக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில் கூட அவர் கால் இறுதி, அரை இறுதிப் போட்டியில் சதமடித்து அசத்தினார்.

இந்த நிலையில் தனது கரியர் குறித்துப் பேசியுள்ள அவர், "இந்த காலகட்டத்தில் தொடர்ந்து 4-5 மேட்ச்கள் சொதப்பினாலும் வாய்ப்பு கிடைக்கிறது . இது எனக்கும் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் சதம் எடுத்து அந்த போட்டியில் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டேன். ஆனாலும் அடுத்த 14 மேட்ச்களுக்கு ஆடும் லெவனில் எனக்கு இடம் கிடைக்கவில்லை.

சதம் எடுத்த பிறகு 14 ஆட்டங்களாக அணியில் இடம் பிடிக்காமல் உலக சாதனை புரிந்தேன். மீண்டும் அணியில் இடம்கிடைத்து 4 விக்கெட்டுகள் எடுத்து 65 ரன்களையும் எடுத்த போதிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கியிருந்தால் நிச்சயம் என்னை நான் நிரூபித்திருப்பேன். இப்போது டீமை விட்டு தூக்கிவிடுவார்கள் என்ற பயம் இல்லாமல் வீரர்கள் ஆடுகிறார்கள். வீரர்களுக்கு நிர்வாகம் ஆதரவு கொடுக்கிறது.

இப்போது பாருங்கள் எத்தனை சுதந்திரமாக ஆடுகிறார்கள், காரணம், டீமை விட்டு தூக்கிவிடுவார்கள் என்ற பயம் இல்லை. விக்கெட் எடுக்கிறார்களோ இல்லையோ, ரன் அடிக்கிறார்களோ இல்லையோ நிர்வாகம் வீரர்களுக்கு ஆதரவு தருகிறது. இதைப் பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது 4 இன்னிங்ஸை வைத்து ஒருவரது கரியரையே முடிவு கட்டி விட முடியாது.

இப்போது ரிஷப் பண்ட் மீது விமர்சனம் எழுந்த போதிலும், ராகுல் திராவிட் அவருக்கு ஆதரவு அளித்தார். இதைப் போன்ற ஆதரவு எனக்கும் கிடைத்திருக்கலாம்" என தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

Also Read: மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி: 7.36 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய அதானி.. அம்பானிக்கு எந்த இடம்?