Sports

Mumbai Indians Playoff வாய்ப்பை இழக்கிறதா? தொடர்ச்சியாக 5 வது தோல்வி: மீளுமா அம்பானி அணி ?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஏற்கனவே 4 போட்டிகளில் தோற்ற நிலையில் இப்போது 5 வது போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றிருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் வெற்றிக்கான வாய்ப்பிருந்துமே முக்கியமான இடங்களில் தவறு செய்து கடைசிக்கட்டத்தில் போட்டியை கோட்டைவிட்டது. 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

மும்பை அணியே முதலில் பந்துவீசியிருந்தது. பஞ்சாப் அணி சார்பில் தவானும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். மயங்க் அகர்வால் இந்த சீசனில் இதுவரை பெரிதாக பெர்ஃபார்மே செய்யவில்லை. கேப்டனான அவர் தொடர்ச்சியாக சொதப்பிக் கொண்டே இருந்தது அணிக்கு பின்னடைவையே கொடுத்தது.

ஆனால், அந்த சொதப்பல்களை மயங்க் அகர்வால் இன்றைக்கு தொடரவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் முதல் பந்திலிருந்தே மயங்க் அகர்வால் பட்டையை கிளப்ப தொடங்கினார். பாசில் தம்பி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தே பவுண்டரிதான். மேலும்., அந்த பவர்ப்ளே முழுவதுமே மயங்க் அகர்வால் நல்ல அதிரடியாகவே ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் ஷிகர் தவாண் ஒரு முனையில் விக்கெட்டை காத்து நின்று ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப் உருவாக மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

பஞ்சாப் அணிக்கு இந்த பார்ட்னர்ஷிப்கள் அமைவதுதான் கடந்த போட்டிகளில் பெரிய பிரச்சனையாக அமைந்தது. அதிரடி வீரர்களை அதிகம் கொண்டிருப்பதால் ஒவ்வொரு பந்தையும் சிக்சர் அடிக்க முயல்கிறார்களே ஒழிய ஒரு அணியாக ஆட கூட்டாக பார்ட்னர்ஷிப்களை அமைக்க அந்த அணியின் வீரர்கள் அவ்வளவாக முயலவில்லை. ஆனால், இந்த போட்டியில் அந்த தொல்லையும் தீர்ந்தது. தவானும் மயங்க் அகர்வாலும் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களுக்கு கூட்டணி அமைத்திருந்தனர்.

மயங்க் அகர்வால் அரைசதம் அடித்துவிட்டு அவுட் ஆன பிறகும் கூட தவாண் ஒரு முனையில் நின்று 17 வது ஓவர் வரை ஆடினார். முதலில் மயங்க் அகர்வாலுக்கு ஒத்துழைக்கும் வகையில் மெதுவாக ஆடியவர், பின்னர் தனது அதிரடியாக ஆடினார். கடைசிக்கட்டங்களில் 180+ ஸ்ட்ரைக் ரேட் வரை அதிரடியாக வெளுத்தெடுத்தார். டெத் ஓவர்களில் ஜித்தேஷ் சர்மாவும் ஷாரூக்கானும் இன்னும் அதிரடியாக ஆட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 199 ரன்கள் டார்கெட்டாக செட் செய்யப்பட்டது.

மும்பை அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கான பெரிய தொடக்கம் கிடைக்கவில்லை. தவாண் + மயங்க் அகர்வால் கூட்டணியை போல ரோஹித் + கிஷன் கூட்டணி பெரிதாக சோபிக்கவில்லை. முதல் 6 ஓவர்களில் 42 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்திருந்தனர். வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்ரேட் 10 க்கும் மேல் சென்றது. இந்த சமயத்தில்தான் அந்த மேஜிக் நடந்தது. பேபி ஏபிடியான டெவால்ட் ப்ரெவிஸ் க்ரீஸுக்குள் வந்தார். கொஞ்ச நேரமே நின்றாலும் போட்டியை மும்பை பக்கமாக மாற்றிவிட்டு சென்றார். அபாயகரமான லெக் ஸ்பின்னரான ராகுல் சஹாரின் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டார். 25 பந்துகளிலேயே 49 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 196. இவருக்கு உறுதுணையாக இன்னொரு பக்கம் இன்னொரு இளம் வீரரான திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி வெளுத்து வாங்கினார்.

இந்த கூட்டணி கொஞ்ச நேரம் நீடித்திருந்தால் ஆட்டம் மொத்தமாக மும்பை இந்தியன்ஸ் பக்கம் வந்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை. ப்ரெவிஸ் 49 ரன்களில் ஓடியன் ஸ்மித்தின் பந்தில் அவுட் ஆகினார். கடைசிக்கட்டத்திக் சிறு சிறு தவறுகளால் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பேட்டர்களான திலக் வர்மா மற்றும் பொல்லார்ட ஆகிய இருவருமே ரன் அவுட் ஆகியிருந்தனர். சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் முயன்றிருந்தாலும் அவராலும் கடைசியில் ஒன்றும் செய்ய முடியவில்லை. மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் திவேதியாவுக்கு இரண்டு சிக்சர்களை கொடுத்து கையிலிருந்த போட்டியை விட்ட ஓடியன் ஸ்மித் இங்கே கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது சிறப்பான சம்பவம்.

மும்பை இந்தியன்ஸ் ஆடிய 5 போட்டிகளிலும் தோற்றிருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு 9 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கிறது. இந்த 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்றால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப்ஸை பற்றி யோசிக்கவே முடியும். 2014 இல் இப்படி முதல் 5 போட்டிகளையுமே தோற்று அதன்பிறகு, மும்பை ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. அந்த அசாத்தியம் இங்கேயும் நிகழ்த்தப்படுமா?

Also Read: இது ஐ.பி.எல் சபதம்... வைரலாகும் RCB தீவிர ரசிகையின் செயல்.. கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி!