Sports

சீனாவில் தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்... தனி ஒருவராக களமிறங்கும் ஜம்மு காஷ்மீர் வீரர்!

சீனாவின் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் ஆரிஃப் கான் எனும் ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்வாகியிருந்தார். ஆரிஃப் கான் பீஜீங்கிற்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.

இயல்பிலேயே இந்தியா ஒரு குளிர்பிரதேசம் கிடையாது. அதனால் மிதவெப்ப நாடான இந்தியாவில் குளிர்கால விளையாட்டு போட்டிகளுக்கு எப்போதுமே ஒரு பெரிய வெளி இருந்ததில்லை. 1924லிருந்தே குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தியா முதன் முதலில் 1964 இல் ஆஸ்திரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸிலேயே பங்கேற்றிருந்தது. இந்தியா சார்பில் ஜெர்மி புஜாஸ்கி எனும் நபர் அந்த ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருந்தார். அதிலிருந்து இப்போது வரை இந்தியா 10 முறை குளிர்கால ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருக்கிறது. சிவகேசவன் எனும் வீரர் மட்டும் 6 ஒலிம்பிக்ஸ்களில் பங்கேற்று சாதனை படைத்திருக்கிறார்.

சைலஜா குமார் என்பவர் இந்தியா சார்பில் குளிர்கால ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற முதல் நபராக இருக்கிறார். 10 முறை பங்கேற்றிருந்தாலும் இந்திய வீரர்/வீராங்கனைகள் ஒரு முறை கூட பதக்கத்தை வென்றதில்லை. இந்தியாவின் பங்களிப்புமே அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைந்துக்கொண்டே வருகிறது. 2006ல் இந்தியா சார்பில் 4 பேர் இந்த ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருந்தனர்.

2014ல் 3 பேர் பங்கேற்றிருந்தனர். 2018 இல் 2 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இப்போது 2022 இல் ஒரே ஒரு நபர் மட்டுமே பங்கேற்கிறார். இந்த முறை குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் சீனாவின் பீஜிங்கில் நடைபெறுகிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் கான் மட்டுமே Slalom மற்றும் Giant Slalom எனும் இரண்டு வகையான பனிச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார். ஆரிஃப் கான் ஜம்மு காஷ்மீரின் குல்மார் மலைப்பகுதியை சேர்ந்தவர்.

கால்பந்து, கிரிக்கெட் போன்றவை ஆடுவதற்கு விருப்பம் இருந்தாலும் அங்கே அதற்கான மைதான வசதிகள் இல்லாததால் பனிச்சறுக்கு மட்டும் அவர்களால் ஆட முடிந்த விளையாட்டாக இருந்திருக்கிறது. ஆரிஃப் கானின் தந்தையும் இந்த பனிச்சறுக்கு சார்ந்த உபகரணங்களை வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருவதால் ஆரிஃப் கானுக்கு இந்த விளையாட்டின் மீது இயல்பிலேயே ஆர்வம் இருந்தது.

12 வயதிலேயே தேசிய அளவிலான போட்டிகளில் வென்றவர் அதன்பிறகு, வெளிநாடுகளுக்கு சென்று ஒலிம்பிக்ஸிற்காகவே பிரத்யேக பயிற்சியில் இறங்க ஆரம்பித்தார். இப்போது அவருக்கு 31 வயதாகிறது. முதல் முறையாக குளிர்கால ஒலிம்பிக்ஸில் ஆடுவதற்கான இடத்தை தகுதிச்சுற்று மூலம் வென்று தகுதிப்பெற்ற வீரராக பீஜிங்கிற்கு பயணப்பட இருக்கிறார்.

ஒன்றிய அரசின் 'Target Olympic Podium Scheme' மூலமும் இவருக்கு உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது. பதக்கம் வெல்வதென்பது மிகப்பெரிய இலக்கு என்றாலும் முதல் 30 இடங்களுக்குள் வந்தாலே பதக்கம் வென்றதற்கு சமம் என ஆரிஃப் கான் பேசியிருக்கிறார். அவரின் லட்சியப்படியே டாப் 30 க்குள் வருவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஆரிஃப் கானின் போட்டிகள் பிப்ரவரி 16 முதல் தொடங்க இருக்கின்றன.

Also Read: ”ஃபினிஷராக பயணத்தை நிறைவு செய்யவே விருப்பம்” - தோனி இடத்தை பிடிக்க பார்க்கிறாரா தினேஷ் கார்த்திக்?