Sports

வரலாற்று சாதனையோடு பாராலிம்பிக்கை முடித்திருக்கும் இந்தியா!

19 பதக்கங்களுடன் டோக்கியோ பாராலிம்பிக்கை முடித்திருக்கிறது இந்தியா. இது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை செய்திடாத சாதனை ஆகும்.

டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினா படேல் டேபிள் டென்னிஸில் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியது. டேபிள் டென்னிஸ் மாதிரியான விளையாட்டில் இந்தியர் ஒருவர் டேபிள் டென்னிஸில் உலக அரங்கில் வெல்வது இதுவே முதல் முறை.

ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா தொடர்ச்சியாக மூன்றாவது பாராலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார். கடந்த இரண்டு முறையும் தங்கம் வென்றிருந்தவர் இந்த முறை வெள்ளி வென்றிருந்தார். ஈட்டி எறிதலின் இன்னொரு பிரிவில் சுமித் அண்டில் எனும் இந்திய வீரர் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

தொடர்ச்சியாக இரண்டாவது பாராலிம்பிக்கில் பங்கேற்றிருந்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்த முறை வெள்ளி வென்று அசத்தியிருந்தார்.

துப்பாக்கிச்சுடுதலிலும் பேட்மிண்டனிலும் இந்திய வீரர்/வீராங்கனைகள் பட்டையை கிளப்பியிருந்தனர். துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் 5 பதக்கங்கள் கிடைத்திருந்தது. 19 வயதே ஆகும் அவனி லெகாரா ஒரு தங்கம் மற்றும் வெண்கலம் வென்று வரலாறு படைத்திருந்தார். சிங்ராஜ் அதானா எனும் வீரரும் இரண்டு பதக்கங்களை வென்றிருந்தார்.

பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் நான்கு பதக்கங்களை வென்றிருந்தனர். பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நாகர் எனும் இரண்டு வீரர்கள் தங்கம் வென்றிருந்தனர்.

1968 லிருந்து 2016 வரை 12 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றிருந்தது. ஆனால், இந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டுமே 5 தங்கப்பதக்கங்களுடன் 19 பதக்கங்களை வென்றிருக்கிறது. வாழ்வில் பல இன்னல்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த மாற்றுத்திறனாளிகள் இன்று இந்தியாவின் புகழை உலக அரங்கில் பல மடங்கு உயர்த்தியிருக்கின்றனர். ஒட்டுமொத்த வாழ்வுக்கும் தேவையான ஊக்கத்தையும் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: ‘இவங்க ஆட்டம் செம்ம தூள்’.. இந்தியாவுக்கு 5வது தங்கம் : பேட்மிண்டனில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர் !