Sports

வென்றாரா தோற்றாரா? - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது? Olympics

இந்திய குத்துச்சண்டையின் முகமாக அறியப்பட்டவர் மேரி கோம். மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டிற்கு வெண்கல பதக்கம் வென்று கொடுத்தார். பாக்ஸிங்கில் இந்தியாவிற்கு பதக்கத்தை வென்று கொடுத்த முதல் பெண் இவர். பல தடைகளையும் தாண்டி குத்துச்சண்டையில் கலந்து கொண்டு பல பெண்களுக்கும் ஊக்கமாக அமைவதால் 'Magnificent Mary' என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக 2016 ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற முடியாமல் போனார். அவருடைய கரியர் அத்தோடு முடிந்தது என நினைக்கையில், விடாப்பிடியாக முயற்சித்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றார். 40 வயதை நெருங்கி விட்டதால் இதுதான் அவருக்கு கடைசி ஒலிம்பிக்காக இருக்கும். அதனால் இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வெற்றிகரமாக கரியரை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்திருப்பது வேறு.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் டொமினிக் குடியரை சேர்ந்த வீராங்கனைக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் போட்டியை வென்று அசத்தியிருந்தார். இந்நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் கொலம்பிய வீராங்கனையான வெலன்சியாவுக்கு எதிராக மோதினார்.

ஆரம்பம் முதலே மிகச்சிறப்பாக ஆடினார் மேரி கோம். வெலன்சியாவும் விட்டுக்கொடுக்காமல் சரிசமமாக சவால் அளித்தார். போட்டியின் முடிவு யாருக்கு சாதகமாக போகும் என தெரியாத சூழலில் வெலன்சியா 3-2 என்ற கணக்கில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில்தான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. வெலன்சியா வென்றார் என அறிவிக்கப்பட்டவுடன் வெலன்சியாவை விட மேரி கோமே அதிகமாக ஆராவாரம் செய்தார். ரிங்கை சுற்றி வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வெலன்சியாவையும் கட்டியணைத்திருந்தார். ஒரு சீனியர் வீராங்கனையாக தோல்வியை கூட இவ்வளவு பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறாரே என மேரி கோமை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

சிறிது நேரம் கழித்துதான் விஷயமே தெரிந்தது. போட்டியை முடித்துவிட்டு பேட்டியளித்த மேரி கோம் 'இப்போது வரை நான் தான் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்' என கூறினார். அதாவது அவர் வெற்றி பெற்றார் என்று நினைத்துதான் ரிங்கை சுற்றி வந்து அவ்வளவு ஆராவாரம் செய்திருக்கிறார்.

'யார் ஜெயித்தார் என்பது உலகிற்கே தெரியும். எல்லாருமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முடிவு எனக்கு சாதகமாக வரவில்லை' என கண்ணீரும் சிந்தியிருக்கிறார்.

போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடம் முன்பாக மேரிகோமின் ஜெர்சியை மாற்றும்படி நடுவர்களால் கூறப்பட்டுள்ளது. இது எனக்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 5 நிமிடம் முன்பு வந்து அவசரமாக ஜெர்சியை மாற்ற சொன்னதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய குத்துச்சண்டையின் முகமாக அறியப்பட்ட மேரிகோமின் ஒலிம்பிக் பயணம் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் முடிந்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வில்வித்தையில் கொரியா சாதிப்பது எப்படி? : ஹாலிவுட் படங்களை மிஞ்சும் பயிற்சி முறை!