Sports

7 விக்கெட் எடுத்து கவுண்டியில் கலக்கிய அஷ்வின்... இங்கிலாந்து தொடருக்கு நூறு சதவீதம் ரெடி!

இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கிறது இந்திய அணி. இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணியின் பிரதான ஸ்பின்னரான அஷ்வின் கவுண்டி போட்டிகளில் விளையாடும் முடிவை எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து சர்ரே அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.

சோமர்செட் அணிக்கு எதிராக சர்ரே அணி ஆடிய போட்டி கடந்த 11 ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் அஷ்வினும் சர்ரே அணிக்காக களமிறங்கியிருந்தார். இந்த போட்டியில் சர்ரே அணி முதலில் பந்துவீசியது. சர்ரே அணியின் கேப்டனான ரோரி பர்ன்ஸிடம் முதல் ஓவரையே கேட்டு வாங்கினார் அஷ்வின். முதல் இன்னிங்ஸில் அஷ்வின் சிறப்பாக பந்துவீசியிருந்தாலும் அவரால் பெரிதாக விக்கெட்டுகளக் எடுக்க முடியவில்லை. 49 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார். ஆனாலும், 2.8 என்ற எக்கனாமியே வைத்திருந்தார். இது கொஞ்சம் அவருக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது. மற்ற பௌலர்களை விட அஷ்வினை சோமர்செட் அணியின் பேட்ஸ்மேன்கள் அதீத ஜாக்கிரதையோடு எதிர்கொண்டிருந்தனர் என்பதையே இது காட்டுகிறது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய அஷ்வின் டக் அவுட் வேறு ஆகியிருந்தார். மொத்தமாக பார்த்தால் முதல் இன்னிங்ஸ் அஷ்வினுக்கு கொஞ்சம் சுமாராகவே அமைந்திருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸ் அப்படியில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் சர்ரே அணியின் ஹீரோவே அஷ்வின்தான். மொத்தமாக 15 ஓவர்களை வீசிய அஷ்வின் 4 மெய்டன்களோடு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சோமர்செட் அணியின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் வீழ்த்தி அந்த அணியின் முதுகெலும்பையே முறித்தார். முதல் இன்னிங்ஸ் 429 ரன்களை எடுத்த சோமர்செட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதற்கு முழுமுதற் காரணம் அஷ்வின் மட்டுமே. மொத்தமாக இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அஷ்வின்.

கடைசி நாளான நேற்று அஷ்வின் அசத்தலான பந்துவீச்சால் ஆட்டம் ட்ராவில் முடிந்தது. இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இப்படி ஒரு அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸை செய்திருப்பதால் இந்திய அணியும் மகிழ்ச்சியாகியுள்ளது. நேற்று கவுண்டி போட்டியை முடித்த கையோடு பயோ பபுளுக்குள் நுழைந்திருக்கிறார் அஷ்வின்.

இந்திய அணி இங்கிலாந்தின் கவுண்ட்டி அணிகளோடு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடவிருக்கிறது. இதிலும், அஷ்வின் சிறப்பாக வீசும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியாவின் துருப்புச்சீட்டாக அஷ்வின் இருப்பார். வெளிநாட்டு மைதானங்களில் ஸ்பின்னர்கள் பெரிதாக சாதிக்க முடியாது என்கிற வழக்கத்தை, இந்த முறை இங்கிலாந்தில் அஷ்வின் உடைப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

-உ.ஸ்ரீ

Also Read: கவுண்டி போட்டியில் களமிறங்கும் அஷ்வின்... இங்கிலாந்து தொடரில் கலக்குவாரா?