Sports

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதமடித்து அணியைக் காப்பாற்றிய வீரர் : யார் இந்த Kyle Mayers?

கரீபிய மண்ணிலிருந்து மீண்டும் ஒரு அதிசயிக்கத்தக்க வீரர் உருவாகியிருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியை வென்றிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். 395 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து கரீபிய அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் பின்னடைவிலிருந்து விண்டீஸ் இந்த வெற்றியை பெற்றதுதான் ஆச்சர்யம். அறிமுக வீரரான Kayle mayers இரட்டைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

பங்களாதேஷின் சாட்டோக்ராமில் வைத்து இந்த போட்டி நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸின் பிரபலமான வீரர்களான கேப்டன் ஜேசன் ஹோல்டர், பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், ஹெட்மயர், சேஸ், ஹோப் என பலருமே கொரோனாவை காரணம் காட்டி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்துவிட்டனர். ஆனால், இதில் பல வீரர்கள் அபுதாபியில் நடக்கும் T10–ல் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே A அணி போன்று பெர்ஃபார்ம் செய்யும் வெஸ்ட் இண்டீஸின் உண்மையான A அணியை சேர்ந்த வீரர்கள்தான், இந்தப் போட்டியில் ஆடியிருக்கின்றனர். மொத்தம் 3 வீரர்கள் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட்டுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். அதில் ஒருவர்தான் பர்படாஸை சேர்ந்த ஆல்ரவுண்டரான கைல் மேயர்ஸ். CPL தொடரில் சில பல அதிரடியான இன்னிங்ஸ்களையும் இவர் ஆடியிருக்கிறார். கடந்த இங்கிலாந்து நியுசிலாந்து சீரிஸின் போது கூட ரிசர்வ் ப்ளேயராக அணியுடன் சென்றிருந்தவருக்கு இந்த முறைதான் அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

இந்த போட்டியில் வங்கதேச அணியே முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனர் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் அரைசதம் மற்றும் மெஹதி ஹசனின் சதத்தால் முதல் இன்னிங்ஸிலேயே அந்த அணி 430 ரன்களை சேர்த்தது. பதிலுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியால் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களே எடுக்க முடிந்தது.

இந்த முதல் இன்னிங்ஸிலும் கேல் மேயர்ஸ் 40 ரன்களை அடித்திருப்பார். ஸ்பின்னர்களை Back Foot–ல் ஷாட்கள் ஆடி 7 பவுண்டரிகளை அடித்திருப்பார்.

முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் 223 ரன்களை எடுத்து இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4 செஷன்கள் மீதமிருந்ததால் பங்களாதேஷின் வலுவான பௌலிங் அட்டாக் விண்டீஸை ஆல் அவுட் எடுத்துவிடலாம் என்றே நினைத்தது. அதற்கேற்ப ஓப்பனர்களான ப்ராத்வேட்டும் கேம்ப்பெல்லும் 20, 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். ஆனால், இதற்குப் பிறகுதான் பூனரும் கைல் மேயர்ஸும் கூட்டணி போட்டனர். இவருமே அறிமுக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேயர்ஸ் அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க, பூனர் அவருக்கு பக்கப்பலமாக ஒரு எண்டில் விக்கெட் விடாமல் நின்று ஆடினார். இதன் விளைவாக நேற்றைய நாள் முடிவில் 110/3 என்ற நிலையிலிருந்தது விண்டீஸ்.

கடைசி நாளில் விண்டீஸ் வெற்றி பெற 285 ரன்கள் தேவைப்பட்டது. காலையில் முதல் செஷனை இந்த கூட்டணி பார்த்து பொறுமையாக விக்கெட் ஜாக்கிரதையோடு ஆடியது. கொஞ்ச நேரம் கழித்து முஷ்டபிஷுர் ரஹ்மான் ஓவரில் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து, மேயர்ஸ் கியரை மாற்றியிருப்பார். பூனரும் இதற்கு பிறகு கொஞ்சம் வேகமெடுக்க மேயர்ஸ் சதத்தையும் பூனர் அரைசதத்தையும் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர்.

கடைசி செஷனில் வெற்றி பெற 129 ரன்கள் தேவைப்பட்டது. டீ ப்ரேக் முடிந்தவுடனேயே தைஜுல் இஸ்லாம் ஓவரில் ஒரு சிக்சரை அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே lbw ஆகி 86 ரன்களில் வெளியேறினார் பூனர். இதன்பிறகு அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழத் தொடங்க, சுதாரித்துக்கொண்ட கைல் மேயர்ஸ் பவுண்டரிகளை விடுத்து சிக்சர்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த செஷனில் மட்டும் 6 சிக்சர்களை பறக்கவிட்டார். மேயர்ஸின் அதிரடியால் டார்கெட்டும் நெருங்கி வர ஆரம்பித்தது. ஆட்டம் 1.3 ஓவர்கள் இருக்கையில் நயீம் வீசிய ஓவரில் சிங்கிள் தட்டி விண்டீஸை வெற்றிபெற செய்தார் மேயர்ஸ். 210 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார் கைல் மேயர்ஸ்

அயல்நாட்டு மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடுவது சாதாரணமான விஷயமில்லை. அறிமுக போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் அடிக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதற்கு முன்னர் 5 முறைதான் நான்காவது இன்னிங்ஸில் இரட்டைசதம் அடிக்கப்பட்டிருக்கிறது. மேயர்ஸ் இன்றைக்கு அடித்தது 6 வது இரட்டைசதம். ஆசியாவில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுவே.

இந்தப் போட்டிக்கு முன்பாக கொடுத்த ஒரு பேட்டியில், 'நான் வங்கதேசத்துக்கு எதிராக சதமடிப்பேன்' என சொல்லியிருந்தார் கைல் மேயர்ஸ். சொன்னதை போலவே சதம் அல்ல, இரட்டைச் சதம் அடித்து, அணியை இமாலய வெற்றியடைய செய்திருக்கிறார் மேயர்ஸ்.

யாருமே எதிர்பாராத சமயத்தில் ஆச்சர்யங்களை நிகழ்த்திக் காட்டுவதுதான் கரீபியன்களின் தனி ஸ்டைல். இன்றைக்கு மேயர்ஸும் அறிமுகப்போட்டியிலேயே இரட்டைசதம் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்!

Also Read: ஸ்ரீநாத் பந்தில் விக்கெட் விழக்கூடாதென வேண்டிக்கொண்ட இந்திய ரசிகர்கள்... வரலாற்று சாதனை படைத்த கும்ப்ளே!