Sports

IND vs AUS பயிற்சி ஆட்டம்: டெலிவரிகளில் தடுமாறிய நடராஜன்.. மோசமாக அவுட் ஆன மயங்க்.. கோலி கொடுத்த ஐடியா!

ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே ரொம்பவே மோசமாக பேட்டிங் செய்தன. இந்தியா சார்பில் பும்ரா எடுத்த 55 ரன்கள்தான் ஒட்டுமொத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தடுமாறினர். குறிப்பாக, இந்திய அணியின் ஓப்பனர் மயங்க் அகர்வால் 5 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 ரன்களில் மோசமாக அவுட் ஆகியிருந்தார்.

ஆஸியில் இந்தியா இந்த தொடரை வெல்ல வேண்டுமெனில் ஓப்பனர்கள் நிலையாக நின்று ஆட வேண்டும். இதை உணர்ந்த இந்திய கேப்டன் கோலி வலைப்பயிற்சியில் சில யுக்திகளை மயங்க் அகர்வாலுக்கு நேற்று பாடமெடுத்துக் கொண்டிருந்தார். மயங்க்குக்கு கோலி என்ன ஐடியா கொடுத்தார்? மேலும் நேற்றைய வலைப்பயிற்சியில் நடந்த சுவாரஷ்யமான நிகழ்வுகள் குறித்து இங்கே பார்ப்போம்.

மேலே எழும்பி வந்த ஒரு ஷாட் பாலை தொட்டு எட்ஜ்ஜாகி ஸ்லிப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருப்பார் மயங்க் அகர்வால். முந்தைய நெட் செஷனிலும் பும்ரா மற்றும் ரகு (Support staff) வீசிய டெலிவரிகளிலும் இதேமாதிரிதான் எட்ஜ் வாங்கியிருப்பார் மயங்க். அவருக்கு இதே மாதிரியான டெலிவரிகளை சமாளிப்பதில் தடுமாற்றம் இருக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி அவுட் ஆவதால் தன் மீதே கோபம் எழுந்து கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று கேப்டன் கோலி, மயங்க் அகர்வாலுடன் வலைப்பயிற்சியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை செலவளித்திருக்கிறார்.

முதலில் கொஞ்ச நேரம் மயங்க் அகர்வாலின் கை மற்றும் பேட் பொசிஷன் குறித்து சில ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார் கோலி. 'இதே மாதிரி கூடுதல் பவுன்ஸோடு எழும்பி வரும் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளை எதிர்கொள்ளும்போது முதலில் உங்களின் பேட் பந்துக்கு மேலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி பந்தை விட பேட் உயரத்தில் இருந்தால், நீங்கள் பந்தை நோக்கி இழுக்கப்பட்டு எட்ஜ்ஜாகும் வாய்ப்பு வெகுவாக குறையும்'- இதுதான் கோலி, மயங்க் அகர்வாலுக்கு கொடுத்த முதல் டிப்ஸ். இந்த ஆலோசனைக்கு பிறகு கோலி கொஞ்சம் தள்ளி போய் சைடில் நின்றுகொண்டு, மயங்க் ஷார்ட் பால்களை எதிர்கொள்ளும் போது அவருடைய கால் பொசிஷன் எப்படி இருக்கிறது என கவனித்தார்.

நெட் பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பாலாக வீசிக்கொண்டிருக்க, ஓரமாக நின்று கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த கோலி, மயங்கின் டெக்னிக்கில் சில பிழைகள் இருப்பதை கண்டுபிடித்தார். 'உங்களுடைய பின்னங்கால் மற்றும் தொடை ஷார்ட் பால்களை எதிர்கொள்ளும்போது காற்றில் இருக்கிறது அல்லது மூவ்மெண்டில் இருக்கிறது' என தான் கவனித்த குறையை மயங்கிடம் கூறினார் கோலி. 'நீங்கள் பின்னங்காலை நகர்த்துவதற்கு பதில் முன்னங்காலை கொஞ்சம் நகர்த்தி முன்னால் அழுத்தி வைத்து பந்தை எதிர்கொள்ள முயலுங்கள்.

அப்போது உங்களால் பந்தின் லெந்த்தை பொறுத்து front foot, back foot என இரண்டு விதத்திலும் ஷாட் ஆட முடியும்' என இதற்கான தீர்வையும் மயங்க் அகர்வாலுக்கு கற்றுக்கொடுத்தார் கோலி. கோலி சொன்ன சில டிப்ஸ்களை அப்ளை செய்ய தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மயங்க். அவர் பேட் செய்வதை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் கோலி. மயங்க் அகர்வாலும் கச்சிதமாக கோலி சொன்னதை புரிந்துகொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

இறுதியாக, 'உங்களின் ஸ்டாண்ட்ஸை கொஞ்சம் ஓப்பனாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களால் இரண்டு கண்களாலும் பந்தை பார்க்க முடியும். இது மிக உதவியாக இருக்கும்' என ஒரு அட்வஸை கொடுத்தார் கோலி. மயங்க் அகர்வாலும் கோலியின் டிப்ஸ்களை புரிந்துக்கொண்டு திருத்திக்கொள்ள கோலி திருப்தியடைந்தார். சிலமணித்துளிகள் மயங்க் அகர்வாலுக்கு க்ளாஸ் எடுத்த பிறகு, கோலி வலைப்பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். கோலி வழக்கம்போல எல்லா பௌலர்களையும் சுலபமாக எதிர்கொண்டார்.

ஆனால், நடராஜன் வீசிய டெலிவரிகள் மட்டும் கோலியை பெரிதாக தடுமாற செய்தது. நடராஜன் வீசிய டெலிவரிகளில் இரண்டு மூன்று முறை எட்ஜ்ஜாகி இருக்கிறார் கோலி. மேலும், சில பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேடிலும் வாங்கியிருக்கிறார். இதன்பிறகு, நடராஜனை வெகுவாக பாராட்டிய கோலி, அவரின் லெந்த் குறித்து சில ஆலோசனைகளை மட்டும் வழங்கியிருக்கிறார்.

குல்தீப் யாதவ்வை இன்னும் கொஞ்சம் வேகமாக வீச சொன்ன கோலி, வாஷிங்டன் சுந்தரை பேடுக்கும் பேட்டுக்கு இடையில் சென்று ஆஃப் ஸ்டம்ப்பை தாக்கும் வகையில் ஆஃப் ப்ரேக்கர்களை வீச சொல்லி பயிற்சி எடுத்திருக்கிறார். இறுதியில், ஷர்துல் தாகூரின் சில டெலிவரிகளை எதிர்கொண்டுவிட்டு அவரிடம் கொஞ்நேரம் ஜாலியாக கிண்டல் செய்துவிட்டு வலைப்பயிற்சியை முடித்தார் கோலி.

Also Read: 32 ஆண்டுகளில் 64 கிராண்ட் மாஸ்டர்கள்... ஆனாலும், ஒரே உலக சாம்பியன்! #HBDViswanathanAnand