Sports

சிக்ஸர் அடித்து முதல் இரட்டை சதம் கடந்த ரோஹித் சர்மா : சச்சின், சேவாக் வரிசையில் இணைந்த ஹிட்மேன்!

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ராஞ்சியில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மாவிற்கு பதில் சபாஸ் நதீம் சேர்க்கப்பட்டார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களம் கண்டனர். இதில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்துவீச்சில் வீழ்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி 12 ரன்களில் அன்ரிச் பந்துவீச்சில் வெளியேறினார்.

இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும் ரோஹித் சர்மாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 132 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் சர்மா, ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடியது. அபாரமாக விளையாடிய ரஹானே சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் ரஹானே அடித்த 11வது சதம் இதுவாகும். பின்னர் அவர் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரஹானே ரோஹித் சர்மா இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டிற்கு 267 ரன்கள் சேர்த்தனர். தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 4-வது விக்கெட்டிற்கு 178 ரன்கள் சேர்க்கப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் முதல் இரட்டை சதம் இதுவாகும். ரோஹித் சர்மா 212 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா ஏற்கனவே ஒருநாள் ஆட்டத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டியிலும் முதலாவது இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்த வரிசையில் சச்சின், சேவாக், கெயில் ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.