Sports

23 ஆண்டுகால சாதனையைத் தகர்த்தெறிந்த ரோஹித் சர்மா... இரண்டாம் இன்னிங்ஸிலும் சதம் விளாசல்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 T20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்திய - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்கள் இழந்து 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோஹித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர்.

பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டீன் எல்கர் 160 ரன்களும், டீகாக் 111 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

71 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும், புஜாராவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

81 ரன்களில் புஜாரா பிலாண்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை துவம்சம் செய்த ரோஹித் சர்மா சதம் விளாசினார். 7 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த சதத்தின் மூலம் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர் (மூன்று முறை), ராகுல் டிராவிட் (இருமுறை), விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, தற்போது ரோஹித் சர்மா.

சுனில் கவாஸ்கருக்குப் பிறகு எந்த ஒரு இந்திய தொடக்க வீரரும் ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டதில்லை, அந்த வகையில் ரோஹித் சர்மா சுனில் கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களும், 2வது இன்னிங்சில் 7 சிக்சர்களும் என மொத்தம் 13 சிக்ஸர்கள் விளாசி ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்னதாக 1996ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக வாசிம் அக்ரம் ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்ஸர்களை அடித்து சாதனை புரிந்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்தச் சாதனையை ரோஹித் சர்மா உடைத்தெறிந்துள்ளார்.

பின் வந்து அதிரடியாக ஆடிய ரவிந்திர ஜடேஜா 40 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து வந்த கேப்டன் கோலி (31*), ரஹானே (27*) அதிவேகமாக ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணிக்கு 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

இரண்டாம் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்திலியே டீன் எல்கரின் விக்கெட்டை இழந்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.