Sports

உலகக் கோப்பை 2019:கடைசியாக தோனி ரன் அவுட்டானது எப்போது? ரன் அவுட்டால் ஏற்பட்ட இழப்பு என்ன?

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரிலிருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறி இந்திய ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்திய அணி.

இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு டாப் ஆர்டர் சொதப்பல், மோசமான பிட்ச், மழை, நியூசிலாந்தின் திறமையான பந்து வீச்சு என பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் தாண்டி மிக முக்கியமாக ரசிகர்கள் கருதுவது தோனி கோட்டைத் தொட தவறவிட்ட அந்த ஒரு விநாடிக்கும் குறைந்த நேரமே, என்பதுதான் சோகம்.

தோனியின் ரன் அவுட் இன்றுதான் நிகழ்ந்திருக்க வேண்டுமா என்று நினைக்க ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. உலக கிரிக்கெட்டில் “Excellent Running Between the Wickets” என்ற பாராட்டை 38 வயதிலும் தக்க வைத்துக் கொண்டவர் தோனி. அதற்குக் காரணம் அவரது சமயோஜித திறனும், மின்னல் வேக ஓட்டமும்தான்.

இன்றைய போட்டியிலும், பிரஷரான கடைசி 20 ஓவர்களில் தோனியும் ஜடேஜாவும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்த விதம் தான் கடைசி வரை இந்தியாவை அழைத்துச் சென்றது. தோனி ‘ரன் அவுட்’ என்பது யுகத்துக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு போலானது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக 2016ம் ஆண்டு இதே நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தான் தோனி ரன் அவுட் ஆனது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகே இன்று ரன் அவுட் ஆகியுள்ளார் அதுவும் அதே நியூசிலாந்து அணியுடனான போட்டியில் என்பது கூடுதல் சோகம்.

தோனி சாதாரணமாக எந்த மேட்சிலும் ரன் அவுட் ஆவதில்லை. அப்படி ரன் அவுட் ஆனால், அது அணிக்கு பெரும் இழப்பாகவே இருந்திருக்கிறது. சாதாரண இழப்பல்ல; மிகப்பெரும் இழப்பே. சென்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில், தோனியின் ரன் அவுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து கோப்பையை பறித்தது.

கூடுதலாக இன்னொருய் சோகம் என்னவென்றால், கடந்த 2015 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட், இந்தியா உலகக் கோப்பையிலிருந்து வெளியேற காரணமாக இருந்தது.

இறுதிப் பந்து வரை ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்து கொண்டு கூலாக விளையாடும் தோனியின் விக்கெட் மற்ற அணிகளைப் பொறுத்தவரை மிகவும் காஸ்ட்லியானது. அவ்வளவு காஸ்ட்லியான விக்கெட்டை, ரன் அவுட்டுக்கு பறிகொடுக்கும் போது, அது மேட்சின் போக்கில் ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த போட்டி ஒரு முக்கிய உதாரணம்.

“சரி தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” அப்படி எந்த கேள்வியையும் தோனியிடம் கேட்டு விடாதீர்கள். சிங்கிள்களை டபுள்களாக மாற்றும் பவர் தோனியிடம் இன்னும் உள்ளது. come lets have some fun என உங்களையும் தோனி கலாய்க்கக் கூடும்.

எது எப்படி இருந்தாலும், தோனிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத மிகப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் விக்கெட்டாக இன்றைய ரன் அவுட் இருக்கப் போகிறது. இந்நேரத்தில் தோல்விக்காக அவரை தூற்றுவது, நல்ல ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட்டாக இருக்காது. ஓய்வு பெற வேண்டுமா அல்லது அணியில் தொடர வேண்டுமா என்பதை அவர் முடிவு செய்யட்டும்.

பல ஆண்டுகளாக அதிரடி என்பதை மறந்து, கிரிக்கெட்டில் உப்புமா கிண்டி கொண்டிருந்த இந்திய அணி, இன்று கிரிக்கெட் உலகில் மற்ற நாடுகளுக்கு இத்தனை கடும் போட்டியை கொடுத்தது என்றால் அதற்கு காரணமும் தோனி தான் என்பதை நினைத்து தோனிக்கு நன்றி சொல்லி, ரசிகர்களாகிய நாம் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய நேரமிது.

ஆம், தோனி எப்போதும் நம்ம ‘நாயகன்’ !