Sports
தவான் சதம்... கோலி, ரோஹித் அரைசதம் : ஆஸ்திரேலிய அணிக்கு 353 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஷிகர் தவான் சதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடக்கும் 14-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியையும் வீழ்த்தியது.
இப்படி, சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களால் மிகமுக்கியமான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தபோது, ரோகித் சர்மா (57) அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சிதறடித்த தவான், ஒரு நாள் போட்டிகளில் தனது 17-வது சதத்தைப் பதிவு செய்தார். ஸ்டார்க் பந்தில் தவான் 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கேப்டன் கோலி, ஹர்திக் பாண்ட்யா இணைந்து அசத்தினர். கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். கம்மின்ஸ் பந்தில் பாண்ட்யா (48) விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அதிரடியாக ஆட்டத்தைத் துவங்கிய தோனி கடைசி ஓவரின் முதல் பந்தில் 27 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஸ்டாய்னிஸ் பந்தில் கோலியும் (82) ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் (11) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி நிர்ணயித்த 353 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி தற்போது ஆடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !