Politics

நிறைவடைந்த இந்தியா கூட்டணி சந்திப்பு.. திமுகவின் நிலைப்பாடு குறித்து மு.க.ஸ்டாலின் பேசியது என்ன? -விவரம்!

புதிய தொகுதி மறுவரையறை மசோதா நகலை ஒன்றிய அரசு வெளியிட்டதையடுத்து, திமுக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று (நவ.28) நடைபெற்றது. அதில் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக நிலைப்பாடு எடுத்தது.

குறிப்பாக திமுக முன்பிருந்து வலியுறுத்தி வந்த Fair Delimitation (நியாயமான தொகுதி மறுவரையறை), விகிதாச்சார அடிப்படையில் இருந்ததால் திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. அதன்படி 50% என்றால், தமிழ்நாட்டிற்கு 7.18-ல் இருந்து 7.23% உயரும். மேலும் தென் மாநிலங்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரம் உயரும்.

இப்படியான சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில இந்தியா கூட்டணி கட்சியினர் இந்த மசோதாவுக்கு முழு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதாவது ஆரம்பத்தில் Fair Delimitation என்று கூறி வந்த காங்கிரஸ், திடீரென No Delimitation என்று தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

திமுக ஆதரவு அளித்தால், இந்த மசோதா நிறைவேறும் என்பதால், இன்று (நவ.29) சென்னையில் உள்ள கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை, ராகுல், சோனியா, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, cpim தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சந்தித்தனர்.

சுமார் 1 அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :-

சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, தோழர் எம்.ஏ. பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்தனர். தொடக்கத்திலிருந்தே தி.மு.க முன்வைத்த கோரிக்கைகள் புதிய Delimitation Bill-இல் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், வேறு சில பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.

இம்மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம். 2027 ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்கும் நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை.

1971-க்குப் பிந்தைய எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் Delimitation நடந்தாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் குறையும். தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! இம்மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.

நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை!

பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்! தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! வெற்றி பெறுவோம்!