Politics

சூடு பிடிக்கும் Delimitation விவகாரம்: ஆதரவு தெரிவித்த திமுக.. சென்னையை நோக்கி படையெடுத்த இந்தியா கூட்டணி

தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய பாஜக அரசு, தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதிப்படைய முயற்சி செய்து வந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநில முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொகுதி மறுவரையறை திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஏப்.16, 2026 அன்று ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியது.

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிப்படையாது என்று பாஜகவினர் கூறி வந்தாலும், வட மாநிலங்களின் பிரதிநித்துவம் கூடுவதே, தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டின் முதல் குரல் எழுந்த நிலையில், ஏப்.16, 2026 அன்று கருப்புக்கொடி போராட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

அதோடு தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலையும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் எரித்து போராட்டம் நடத்தியதோடு, நாடாளுமன்றத்திலும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஏப்.15 அன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்ததை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் மொத்தம் பதிவான 489 வாக்குகளில், மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகின. எனவே 3-ல் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது. நியாயமான தொகுதி மறுவரையறையை திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே இந்த மசோதாவுடன் சேர்ந்து மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவும், யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாவும் சேர்ந்து தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அனைத்தும் தோல்வியடைந்தது. இதனை பாஜக உள்ளிட்ட அதன் ஆதரவு கட்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திருப்பி விட பார்த்தார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நியாயமான தொகுதி மறுவரையறையை கேட்டு வந்த திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள், 2023-ம் ஆண்டில் முன்மொழியப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்ததோடு, அதனை உடனடியாக நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியது. ஆனால் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பாஜக, அதனை அப்போது அமல்படுத்தாமல், தொகுதி மறுவரையறை மசோதாவோடு சேர்ந்து தாக்கல் செய்தது. எனவே இதுவும் தோல்வியடைந்தது.

இப்படியான சூழலில் மீண்டும் இந்த மசோதா குறித்து சலசலப்பு தொடங்கியது. அதன்படி கடந்த நவ.27 அன்று, இந்த புதிய தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை வெளியிட்டது ஒன்றிய அரசு. அந்த நகலின்படி, அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்த வழிவகை செய்யும் வகையில் உள்ளது.

மேலும் 2051-ம் ஆண்டு வரை மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் இருக்காது, மகளிர் இடஒதுக்கீடு (33%) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இது வழிவகுக்கும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மக்களவை, மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படுவதோடு, மக்களவையின் மொத்த இடங்கள் 850 ஆகவும், சட்டப்பேரவைகளின் அதிகபட்ச வரம்பு 650 ஆகவும் உயர்த்தப்படும்.

மாநில வாரியான தொகுதிகளின் பிரதிநிதித்துவம் 1971 மக்கள்தொகையின் படியே தீர்மானிக்கப்படும் என்றும், 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே புதிய தொகுதி மறுவரையறை வரைபடம் தயாரிக்கப்படும் என்றும், மக்களவை, சட்டப்பேரவைகளில் 33% இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும் என்றும், இது 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக எம்.பி.க்கள் கூட்டம்

இதைத்தொடர்ந்து நேற்று (நவ.28) நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நியாயமான தொகுதி மறுவரையறையை இந்த மசோதா இருப்பதால், இந்த மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டது. அதாவது தற்போது எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும். மாறாக விகிதாச்சார அடிப்படையில் இதனை கொண்டு வர வேண்டும் என்றும் முன்பே திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியது.

எனவே தான் இந்த தொகுதி மறுவரையறை விவகாரம் பூதாகரமான நிலையில், 'Fair Delimitation' (நியாயமான தொகுதி மறுவரையறை) என்ற பெயரில் முதல் கூட்டு குழு கூட்டம் கடந்த 2025, மார்ச் 25-ம் தேதி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் கேரளம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அதன்படி 50% என்றால், தமிழ்நாட்டிற்கு 7.18-ல் இருந்து 7.23% உயரும். மேலும் தென் மாநிலங்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரம் உயரும். இது நியாயமான தொகுதி மறுவரையறை என்பதால் திமுக ஆதரவு அளிப்பதாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தெரிவித்தார்.

திமுக ஆரம்பத்தில் இருந்தே அதன் நிலைப்பாட்டை மாற்றாத நிலையில், காங்கிரஸ் முன்பிருந்தே தனது நிலைப்பாட்டில் குரங்கு போல் தாவிக்கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் நியாமான தொகுதி மறுவரையறையை கேட்ட காங்கிரஸ், பின்பு தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது.

இப்படியான சூழலில் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 3-ல் இரண்டு பங்கு கிடைத்து இந்த மசோதா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா, ராகுல், கார்கே, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க சென்னை வருகை தந்துள்ளனர்.

இன்னும் சில நிமிடங்களில் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்கவுள்ள நிலையில், திமுக நிலைப்பாடு மாறுபடுமா என்று இந்தியாவே உற்றுநோக்கியுள்ளது.

முன்னதாக இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் 'எட்டப்பர்கள்' என்று விமர்சித்த ராகுல் காந்திக்கு, “வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல; கட்டபொம்மன்களாகவே தீர்மானிக்கும்” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மக்களின் குறைகளை கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! - விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!