Politics
‘அப்படியெல்லாம் புகார் இல்லை’ என்று மறுத்தார்களே... இப்போது என்ன பதில்? - ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
“கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தெரிவித்ததாவது,
“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அம்மையாருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அத்துமீறி அவரது இருப்பிடத்திற்குள் நுழைய முயன்றது தொடர்பாகவும் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று இத்தனை நாட்களாகத் தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் சொன்னது பொய் என்பது இன்று (24.11.2026) நீதிமன்றத்தில் வெளிப்பட்டுள்ளது.
ஜூலை மாதமே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்பதை இன்று தான் சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதுமாகும்!
இத்தனை நாள் பொதுவெளியிலும், பொது மக்களிடமும் மட்டுமல்ல, உயர்நீதிமன்றத்திலேயே ஓர் அரசு மறைத்திருக்கிறது, ‘புகார் எதுவும் இல்லை’ என்று பொய் சொல்லியிருக்கிறது என்பது வெட்கப்படத்தக்கது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதும் ஆகும்.
5 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருக்கிறார்; அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுவெளிக்கு இந்தப் பிரச்சினை வந்த பிறகும் அமைச்சர்களும், சில கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ‘அப்படியெல்லாம் புகார் இல்லை’ என்று மறுத்தார்களே... இப்போது அவர்களெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
இந்த அரசும், அமைச்சர்களும் மக்களை என்னவென்று கருதுகிறார்கள்? மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குறித்த நிர்வாகத்துக்குப் பொறுப்புடையவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தானே? அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
விலைவாசி பற்றிப் பேசினார் என்பதற்காகப் பொருளாதாரப் பேராசிரியர் மீது, வேறு ஒரு பொய் வழக்குத் தொடுத்து அதிகாலையில் கைது செய்த அரசு, தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.வின் முறைகெட்ட நடத்தைக்கும், குற்றத்துக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது வழக்குத் தொடுத்து, என்னென்ன சட்டப் பிரிவுகள் என்று சொன்னால் மட்டும் போதாது! அவர் இழைத்த குற்றத்துக்கு உடனடியாகக் கைது செய்ய வேண்டாமா?
தமிழ்நாடு அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெயருக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்சினையில் அய்ந்து மாதம் கடத்திய அரசு, இனியும் துளியும் தாமதிப்பதை ஏற்க முடியாது.
மகளிர் உரிமை என்பதும், பாதுகாப்பு என்பதும் வாய்ப் பேச்சு வீரம் அல்ல! செயல், செயல், செயல் - அதுவே அவசியம்!
Also Read
-
“இவர் தான் உண்மையான சிங்கப்பெண்... இனி இது தமிழ்நாடு மக்களின் பொறுப்பு” : டி.ஆர்.பி.ராஜா!
-
எம்.எல்.ஏ. என்பதால் சலுகையா? - அருள் விக்னேஷ் வழக்கில் உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
-
தவெக MLA மீது பெண் ஆட்சியர் புகார்.. இது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? : மு.க.ஸ்டாலின் காட்டமான கேள்வி!
-
TVK MLA விவகாரம் : “அன்று முட்டுக்கொடுத்தீர்களே.. இனியாவது நடவடிக்கை எடுப்பீர்களா?” - கனிமொழி MP கேள்வி!
-
“வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது வெட்கக்கேடு“ : மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க கண்டனம்!