Politics
தவெக MLA மீது பெண் ஆட்சியர் புகார்.. இது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? : மு.க.ஸ்டாலின் காட்டமான கேள்வி!
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான சம்பவத்தில் கடந்த ஜூலை மாதமே ஆட்சியர் புகாரளித்துள்ளார் எனவும், அதுகுறித்து தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக, ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரையே கிடப்பில் போட்டு மக்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தவெக அரசு.
ஆட்சியருக்கே இதுதான் நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? என கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
Also Read
-
TVK MLA விவகாரம் : “அன்று முட்டுக்கொடுத்தீர்களே.. இனியாவது நடவடிக்கை எடுப்பீர்களா?” - கனிமொழி MP கேள்வி!
-
“வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது வெட்கக்கேடு“ : மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க கண்டனம்!
-
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
நீதிபதி கேட்ட கேள்வி.. புகார் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.. தொக்காக மாட்டிய TVK MLA.. விழிப்பிதுங்கும் விஜய்!
-
“கள்ளக்குறிச்சி தவெக MLA-வை கைது செய்து விசாரிக்க வேண்டும்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!