Politics

“இந்த 7 பிரச்சினைகளுக்கும் பதில் வேண்டாமா? தீர்வு வேண்டாமா?” : த.வெ.க அரசுக்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!

தமிழ்நாட்டில் நிலவும் நிர்வாக சீர்கேட்டை மறைப்பதற்காக, திசைத்திருப்பல் அரசியல் செய்து வரும் த.வெ.க.வினரைக் கண்டித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“விலைவாசி உயர்வு!

பண்டிகைக் காலத்தில்கூட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடும் சாமானிய மக்கள்!

மீனவர்கள் சந்தித்த துயரம்!

பல உயிர்களைப் பறிகொடுத்த மீனவக் குடும்பங்கள்! உடனே ஓடிப்போய் உதவியிருக்க வேண்டிய அரசு, காலம் கடந்த பிறகு கண்துடைப்பு நடவடிக்கை எடுப்பதாக எழும் குற்றச்சாட்டுகள்!

காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீர்!

வயலுக்குத் தண்ணீர் இல்லை! விவசாயம் பாதிப்பு! நிவாரணத்திற்காகக் காத்துக்கிடக்கும் விவசாயிகள்!

சட்டம் ஒழுங்கு என்ன ஆச்சு?

தலைநகர் சென்னையிலேயே வன்முறைச் சம்பவங்கள்! மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

ஜிஎஸ்டி வளர்ச்சியில் தமிழ்நாடு எங்கே?

நாடு முழுக்க உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 15.8% வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் வெறும் 3% தான்!

மாயமாகும் புதிய முதலீடுகள்!

அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகளை அள்ளுகின்றன. தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்புகளைப் பிற மாநிலங்கள் தட்டிச் செல்கின்றன!

மின்வெட்டுகளும் அதிக விலைக்கு மின்சாரக் கொள்முதலும்!

மின்சாரத்தைத் திட்டமிட்டு வாங்கத் தெரியவில்லையா? மக்கள் பணத்தை இப்படித்தான் செலவு செய்வதா?

கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து DVAC-யில் திமுக அதிரடிப் புகார் அளித்துள்ளது. நிச்சயமாக வெளிப்படையான விசாரணை வேண்டும்!

அதுபோலவே இந்த ஏழு பிரச்சினைகளுக்கும் பதில் வேண்டாமா? தீர்வு வேண்டாமா?

தினமும் ஒரு புது சர்ச்சை! அதை வைத்தே நாள் முழுக்க அரசியல் சண்டை!

இப்படியே மக்களின் கவனத்தைத் திருப்பிவிட்டால் ஆட்சியின் குறைகளை மறைத்துவிடலாம் என்று நினைக்கிறது த.வெ.க அரசு.

சர்ச்சைகளாள் விலைவாசி குறையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேலைவாய்ப்பு உருவாகாது. மக்களுக்கு வேண்டியது வெற்று Scene அல்ல… செயல்பாடு!”

Also Read: திரிஷா விஜய், சங்கீதா விஜய் பெயர்களில் எழுத்தாளர்கள் இருக்கிறார்களா? : தி.மு.க முன்வைத்த 8 கேள்விகள்!