Politics
“புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனில்லை!” : மரிய வில்சனுக்கு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பதிலடி!
தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தனதாக்கிக் கொள்வதையும், தி.மு.க ஆட்சியில் நிறைவுற்றத் திட்டங்களை திறந்துவைப்பதையும் மட்டுமே த.வெ.க அரசு 6 மாதங்களாக செய்து வருகிறது.
தொழில்துறையில் சொல்வதற்கேற்ப எந்த திட்டமும், கடந்த 6 மாதங்களில் புதிதாக செயல்படுத்தப்படவில்லை. இதே நிலைதான், த.வெ.க.வின் ஆட்சி நிர்வாகத்திலும், நிதி நிர்வாகத்திலும் தொடர்கிறது.
அதன் தாக்கமாக, தமிழ்நாட்டின் வரி வருவாய் தேசிய அளவில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. முன்னணி மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை, மெல்ல மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அண்டை மாநிலங்களின் ஜி.எஸ்.டி வரி வருவாய் பல மடங்கு உயர்ந்து வரும் வேளையில், தமிழ்நாட்டின் வரி வருவாய் வெறும் 3 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க முன்னணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனங்கள் குறித்து அமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பழைய ஜிஎஸ்டி விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள்” என மரிய வில்சன் தெரிவித்தார்.
அதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,
“நிதியமைச்சர் அவர்கள், எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையே கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல பதிலளிக்க முயன்றிருக்கின்றார்.
இந்த வருடம் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் 3% என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதே வேளையில், இறக்குமதியினால் கிடைக்கும் வரி வருவாயினால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயர்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கின்றேன்.
அண்டை மாநிலங்களின் வருவாய் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புகளுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை.”
Also Read
-
ஓய்வை அறிவித்த Glenn Maxwell.. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் அசைக்க முடியாத தூண்..!
-
நாளை (நவ.4) கோவை வருகைதரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்! : பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் விவரம் உள்ளே!
-
அசாமிலிருந்து கொண்டுவரப்பட்ட 5 யானைகள் : வெளிச்சத்திற்கு வந்த பா.ஜ.க - த.வெ.க-வின் ரகசியக் கூட்டு!
-
அடிமாட்டு விலைக்கு கொடுக்க நினைப்பது அச்சமா? (அ) ஆந்திராரெட்டி கேங்கின் திட்டமா CM Sir?: அப்பாவு கேள்வி!
-
தவெக நிர்வாகி சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்.. அம்பலமான தூயசக்தி தவெக நாடகம்?