Politics

தேர்தல் ஆணையம் தனிநபரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அமைப்பல்ல! - குடியரசுத் தலைவருக்கு தி.மு.க தலைவர் மனு!

“தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என தெரிவித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

கடந்த 17-10-2026 அன்று நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ள இந்த மனுவில், 77 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தி.மு.க. மக்களவையில் 22 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களையும் கொண்டிருப்பதுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 59 உறுப்பினர்களுடன் முதன்மை எதிர்க்கட்சியாக விளங்குவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தனிநபரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அமைப்பல்ல!

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் நடத்துதல் தொடர்பான மேற்பார்வை, வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு அதிகாரங்களை வழங்குகிறது. 326-ஆவது பிரிவு வயதுவந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்கிறது.

தேர்தல் ஆணையம் என்பது தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரின் தனிப்பட்ட அமைப்பல்ல; மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டப்படியான அமைப்பு என்பதை மனு வலியுறுத்துகிறது.

2023-ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் தொடர்பான சட்டத்தின் 18-ஆவது பிரிவின்படி, ஆணையத்தின் நடவடிக்கைகள் இயன்றவரை ஒருமித்த கருத்திலும், கருத்து வேறுபாடு ஏற்படும்போது பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின்படியும் அமைய வேண்டும்.

டி.என். சேஷன் எதிர் இந்திய ஒன்றியம் (1995), அனூப் பரன்வால் எதிர் இந்திய ஒன்றியம் (2023), மொஹிந்தர் சிங் கில் எதிர் தலைமைத் தேர்தல் ஆணையர் (1978), லால் பாபு ஹுசேன் எதிர் வாக்காளர் பதிவு அலுவலர் (1995) ஆகிய தீர்ப்புகளை மனு மேற்கோள்காட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள ஒருவரின் பெயரை உரிய விசாரணை வாய்ப்பின்றி நீக்கக்கூடாது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1949 ஜூன் 15 அன்று அரசியலமைப்பு நிர்ணய சபையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் தேர்தல் நிர்வாகம் ஆட்சியிலிருக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை மனு நினைவூட்டுகிறது. மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் மீறித் தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

SIR நடவடிக்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்த தி.மு.க.!

2025 ஜூலை மாதத்தில் பீகாரில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதே தி.மு.க. அதனை எதிர்த்ததாக மனு குறிப்பிடுகிறது. பீகாரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் திரு. தேஜஸ்வி யாதவ், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோருடன் பங்கேற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

27-10-2025 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு SIR விரிவுபடுத்தப்பட்டபோது, வடகிழக்குப் பருவமழை மற்றும் பண்டிகைக் காலத்தில் இந்நடவடிக்கையை மேற்கொள்வது சாத்தியமற்றது என்றும், இதனால் தகுதியான வாக்காளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தி.மு.க. எதிர்த்தது. 02-11-2025 அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தை நாடத் தீர்மானிக்கப்பட்டது.

11-11-2025 அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட எண்ணிக்கை மாற்றம்!

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனுவில் தரப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

வாக்காளர் பட்டியல்

மொத்த வாக்காளர்கள்

SIR-க்கு முந்தைய பட்டியலுடன் ஒப்பிடுகையில் குறைந்தது

27-10-2025: SIR-க்கு முந்தைய பட்டியல்

6,41,14,587

—

19-12-2025: வரைவுப் பட்டியல்

5,43,76,755

97,37,832 (15.19%)

23-02-2026: இறுதிப் பட்டியல்

5,67,07,380

74,07,207 (11.55%)

07-04-2026: தேர்தல் பட்டியல்

5,73,43,291

67,71,296 (10.56%)

SIR-க்குப் பிந்தைய வரைவுப் பட்டியலில் முந்தைய பட்டியலைவிட 97,37,832 வாக்காளர்கள் குறைவாக இருந்தனர். திருத்த மேல்முறையீட்டு நடைமுறைகளுக்குப் பிறகும் இறுதிப் பட்டியலில் 74,07,207 பேர் குறைவாக இருந்தனர். 234 தொகுதிகளிலும் சராசரியாகத் தொகுதிக்கு சுமார் 31,655 பேர் நீக்கப்பட்டு இருந்ததாக மனு குறிப்பிடுகிறது.

பல தேர்தல்களில் வாக்களித்த நீண்டகாலக் குடியிருப்பாளர்கள் ‘முகவரியில் இல்லை’ அல்லது ‘இடம்பெயர்ந்தவர்’ எனக் குறிக்கப்பட்டு, தனிப்பட்ட அறிவிப்பும் விசாரணை வாய்ப்பும் வழங்கப்படாமல் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கழக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கண்டறிந்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்கும் 2026 தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பா?

23-04-2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 04-05-2026 அன்று அறிவிக்கப்பட்டன. தொகுதிவாரி வாக்காளர் நீக்கங்களையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு தி இந்து பிசினஸ்லைன் வெளியிட்ட ஆய்வை மனு மேற்கோள்காட்டியுள்ளது. மனுவில் இடம்பெற்றுள்ள தொகுதிவாரி விவரங்கள்:

வாக்காளர் நீக்கங்கள்

தொகுதிகள்

த.வெ.க.

தி.மு.க.

அ.தி.மு.க.

பிற

10,000-க்குக் கீழ்

19

2

7

6

4

10,000–20,000

80

22

20

24

14

20,000–30,000

66

32

21

11

2

30,000–50,000

37

24

8

5

0

50,000–80,000

22

18

3

1

0

80,000-க்கு மேல்

10

10

0

0

0

மொத்தம்

234

108

59

47

20

20 ஆயிரத்துக்கும் குறைவான நீக்கங்கள் ஏற்பட்ட 99 தொகுதிகளில் த.வெ.க. 24 இடங்களிலும் தி.மு.க. 27 இடங்களிலும் வென்றதாகவும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான நீக்கங்கள் ஏற்பட்ட 69 தொகுதிகளில் த.வெ.க. 52 இடங்களிலும் தி.மு.க. 11 இடங்களிலும் வென்றதாகவும் மனு கூறுகிறது.

80 ஆயிரத்துக்கும் அதிகமான நீக்கங்கள் ஏற்பட்ட 10 தொகுதிகளிலும் த.வெ.க. வென்றதாகக் குறிப்பிடுகிறது. 2021-இல் தி.மு.க. வென்ற தொகுதிகளில் சராசரியாக 31 ஆயிரம் பெயர்களும், அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் சுமார் 27 ஆயிரம் பெயர்களும் நீக்கப்பட்டதாகக் கூறி, இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகளைப் பாதித்திருக்கக்கூடும் என மனு குற்றஞ்சாட்டுகிறது.

திருப்பத்தூரில் தி.மு.க. வேட்பாளர் திரு. கே.ஆர். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும், கன்னியாகுமரி, போளூர், திருக்கோவிலூர், பரமத்தி வேலூர் தொகுதிகளில் முறையே 214, 227, 285, 308 வாக்குகள் வித்தியாசத்தில் முடிவுகள் அமைந்ததாகவும் மனு எடுத்துக்காட்டியுள்ளது.

கொளத்தூரில் 2021 தேர்தலில், தான் 1,05,522 வாக்குகள் பெற்று 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாகவும், அ.தி.மு.க. வேட்பாளர் திரு. எம். ஆதிராஜாராம் 35,138 வாக்குகள் பெற்றதாகவும் மனு குறிப்பிடுகிறது. அப்போது 2,84,056 வாக்காளர்கள் இருந்த தொகுதியில் 2025 டிசம்பருக்குள் சுமார் 1,03,812 பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறுகிறது. 2026-இல் தான் 74,202 வாக்குகளும் வெற்றிபெற்ற த.வெ.க. வேட்பாளர் 82,997 வாக்குகளும் பெற்றதாகவும், வித்தியாசம் 8,795 வாக்குகள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனது வெற்றியைத் தடுக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பெருவாரியான அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் குறித்த குற்றச்சாட்டுகள்!

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 49 தொகுதிகளில் வாக்காளர் நீக்கங்களின் எண்ணிக்கை வெற்றி வாக்கு வித்தியாசத்தைவிட அதிகமாக இருந்ததாகவும், சுமார் 60 இலட்சம் வாக்காளர்கள் முரண்பாடுகள் இருப்பதாகக் குறியிடப்பட்டு 27 இலட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் மனு குறிப்பிடுகிறது. அங்கு நீக்கப்பட்டவர்களில் 62 விழுக்காட்டினர் பெண்கள் என ஓர் ஆய்வு கூறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 2026 ஜூன் மாத வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 13-08-2026 அன்று வெளியான வரைவுப் பட்டியலில் 20.66 இலட்சம் பேர் குறைவாக இருந்ததாகவும், மேலும் 12.80 இலட்சம் பேரை 2003 பட்டியலுடன் தொடர்புபடுத்த முடியவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வரைவுப் பட்டியல்களில் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மனு குறிப்பிடுகிறது.

இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதிவு செய்த 14 ஆட்சேபனைகள்!

23-09-2026 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியை மேற்கோள்காட்டி, தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் குறைந்தது 14 சந்தர்ப்பங்களில் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக மனு குறிப்பிடுகிறது.

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின்றி அதன் பெயரில் உத்தரவுகள் வெளியிடப்பட்டதாகவும், புதிய தகவல் தொழில்நுட்பத் தொகுதிகள், இணையவழி தளங்கள், வெளிநாட்டுப் பயண அனுமதிகள், கூட்ட நிகழ்ச்சி நிரல்கள், வாக்காளர் பட்டியல் தரவுகளின் மையப்படுத்தல், படிவம் 6 மாற்றங்கள், மேற்கு வங்க மேல்முறையீடுகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சேபனைகள் எழுந்ததாகவும் மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை மீறிய நடவடிக்கைகள் “அனுமதியற்றவை; சட்டவிரோதமானவை” என்று டாக்டர் சுக்பீர் சிங் சந்து குறிப்பிட்டதாக மனு கூறுகிறது. ஆணையர்கள் ஒன்றிய அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டதாகவும், 09-09-2026 அன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆணையத்தின் முழுக் கூட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறது.

26-09-2026 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட ECI/PN/120/2026 செய்திக்குறிப்பில் இனி நிகழ்ச்சி நிரல்கள் முன்கூட்டியே பகிரப்படும் உள்ளிட்ட நடைமுறைகள் அறிவிக்கப்பட்டதாகவும் மனு எடுத்துரைக்கிறது.

SIR உத்தரவுக்கான ஒப்புதல், படிவம் 6 மாற்றங்கள்!

நாடு தழுவிய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) மேற்கொள்வதற்கான முடிவு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும்,

28.07.2025 தேதியிட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்ப எண் 30951-க்கு, 27.08.2025 அன்று பதிலளித்த மத்திய பொதுத் தகவல் அலுவலர், 24.06.2025 தேதியிட்ட வெளியிடப்பட்ட உத்தரவைத் தவிர, இது தொடர்பான எந்தத் தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்று தெரிவித்தார் என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் ஒருபடி மேலாக, முதல் மேல்முறையீட்டு அதிகாரி, மேல்முறையீட்டு எண் 2906-இல், “2025-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) தொடங்குவது குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று பதிவு செய்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், 24.06.2025 தேதியிட்ட உத்தரவின் 10-ஆவது பத்தியில், நாடு முழுவதும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் முடிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 26.09.2026 தேதியிட்ட செய்திக் குறிப்பில், அந்த உத்தரவு “தேர்தல் ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலைப் பெற்றது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது என்பது அழுத்தமாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்று, தேர்தல் ஆணையம் எடுத்த முடிவைப் பதிவு செய்த கோப்பு இருக்க வேண்டும். ஆனால், அதை ஆணையம் சமர்ப்பிக்கத் தவறியுள்ளது. அல்லது, தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமலேயே நாடு தழுவிய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்ப எண் 30952-க்கு அளித்த பதிலில், தற்போது நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் ஒப்பிட்டுச் சரிபார்ப்பதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் 2003-ஆம் ஆண்டின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும்கூட தேர்தல் ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை எனும் வாதங்கள் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை மாதம் ECINET இணையதளத்தில் இடம்பெற்ற படிவம் 6-இல் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய SIR பட்டியலில் இருந்தனவா எனக் கேட்கும் நிபந்தனை சேர்க்கப்பட்டதாக மனு குறிப்பிடுகிறது. இந்த மாற்றத்துக்கு 16-05-2026 அன்று டாக்டர் விவேக் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்ததாகவும், டாக்டர் சுக்பீர் சிங் சந்து அதனை ஏற்றதாகவும் மனு கூறுகிறது. 05-10-2026 அன்று உச்சநீதிமன்றம் மாற்றப்பட்ட படிவம் 6-க்கு ஒப்புதல் அளித்ததாகக் கருத முடியாது எனத் தெளிவுபடுத்தியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ECINET, ERONET: மாநில வாரியான மென்பொருள் கட்டுப்பாடுகள்!

வாக்காளர் பட்டியல் தயாரிப்பும் திருத்தமும் அந்தந்தத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரின் சட்டப்பூர்வப் பொறுப்பு என்று மனு வலியுறுத்துகிறது. ஆனால், ECINET மற்றும் ERONET கட்டமைப்புகள் வழியாகத் தரவு அணுகல் மையப்படுத்தப்பட்டு, மாநில மற்றும் தொகுதி அலுவலர்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகிறது.

கோவாவில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 97 தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை மீளச் சேர்க்கத் தொழில்நுட்ப அணுகல் இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறது.

20-10-2026 அன்று தி இந்து வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி, மேற்கு வங்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர்களின் கணக்கெடுப்புப் படிவங்கள், ஆவணங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பரிந்துரைகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட முடியாத வகையில் ECINET மென்பொருளில் மாநிலத்துக்கேற்ப குறியீட்டு அடிப்படையிலான கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருந்ததாக மனு கூறுகிறது. 02, 06, 07-10-2026 தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும், இந்த வசதி 28-09-2026 முதலே இருந்ததாகவும், 16-10-2026 மென்பொருள் பதிப்பிலும் தொடர்ந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் போன்ற ஓர் அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) ஒப்புதல் அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு அதிகாரம் பெற்றிருப்பது சட்டவிரோதமானது. இது 1950 மற்றும் 1951-ஆம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின் விதிகளுக்கு முரணானது என்பதை மனு குறிப்பிட்டுள்ளது.

இதனால்தான், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது (SIR), தி.மு.கழகத்தின் BLA-2 முகவர்கள் முனைப்புடன் உதவியபோதிலும், பல ஆண்டுகளாகத் தங்கள் தொகுதியில் வசித்து, முந்தைய பல தேர்தல்களில் வாக்களித்த உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குடியரசுத் தலைவருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நீதித்துறை அலுவலர்கள் சேர்த்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணையத்தின் பெயரில் 16.10 இலட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவற்றைத் தாக்கல் செய்ய யார் அதிகாரம் வழங்கினர் என்று டாக்டர் சுக்பீர் சிங் சந்து கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு இன்று வரை பதில் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வாக்குரிமைப் போராட்டங்கள்!

24-09-2026 முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை நடத்தியதாக மனு குறிப்பிடுகிறது. 02-10-2026, 04-10-2026 அன்று டெல்லி மற்றும் மும்பையில் போராட்டங்கள் நடந்ததாகவும், 09-10-2026 அன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் சென்றதாகவும், 10-10-2026 அன்று டெல்லியில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 10.10.2026 அன்று, தில்லி முற்றுகையிடப்பட்டதைப் போன்ற சூழலுக்குத் தள்ளப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன; ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன; போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதையும்,

முன்னாள் முதலமைச்சர்களான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், செல்வி மம்தா பானர்ஜி, திரு. பினராயி விஜயன், திரு. மாணிக் சர்க்கார் ஆகியோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதையும், கழகத் தலைவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களைத் த.வெ.க. அரசு தடுப்புக் காவலில் வைத்தது. முன்னாள் அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ. இராசா, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலையிட்ட பிறகே மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமிழக வெற்றிக் கழக அரசால் தடுத்து வைக்கப்பட்டதாகவும், முன்னாள் அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ.ராசா மற்றும் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தலையீட்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரும் போராட்டங்கள் நடைபெற்றதாகவும் மனு விவரிக்கிறது.

நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் உச்சநீதிமன்ற வழக்குகள்!

தற்போது பொதுவெளியில் வெளியாகியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 324(5)-ஆவது பிரிவை, 124(4)-ஆவது பிரிவுடனும், 2023-ஆம் ஆண்டுச் சட்டத்தின் 11-ஆவது பிரிவுடனும் இணைத்துப் படிப்பதன் அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர் செய்தி அனுப்பலாம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324(2)-ஆவது பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதையும், அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கு, தற்போதைய சூழலைவிட மிக அவசியமான ஒரு தருணம் வேறெதுவும் இருக்க முடியாது என்பதையும் குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு மனு கொண்டு சென்றுள்ளது.

குடியரசுத் தலைவரிடம் முன்வைக்கப்பட்ட ஒன்பது கோரிக்கைகள்!

1. அரசியலமைப்பின் 86(2)-ஆவது உறுப்பின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்தி அனுப்பி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுவிலும் பொதுவெளியிலும் உள்ள குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து, அரசியலமைப்பின் 324(5)-ஆவது உறுப்பு, 124(4)-ஆவது உறுப்பு மற்றும் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 11-ஆவது பிரிவின்படி பதவிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

2. அரசியலமைப்பின் 78-ஆவது உறுப்பின்படி பிரதமரிடமிருந்து தகவல்களைப் பெற்று, இந்த நாடாளுமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் ஆணையத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தாதிருப்பதையும், ஒவ்வொரு முடிவும் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 18-ஆவது பிரிவின்படி கூட்டு முடிவாக எடுக்கப்பட்டு அதன் கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

3. 2025 SIR நடவடிக்கையின்போது தமிழ்நாட்டின் வரைவுப் பட்டியலில் இடம்பெறாமல் போன 97,37,832 வாக்காளர்களின் பெயர் நீக்கங்களின் சட்டப்பூர்வத்தன்மை, 23-02-2026 இறுதிப் பட்டியல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மீதான தாக்கம் ஆகியவை குறித்து அரசியலமைப்பின் 143-ஆவது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும்.

4. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட SIR அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி, SIR-க்கு முந்தைய பட்டியலை மீண்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டப்படி திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

5. அனைத்து மாநிலங்களிலும் SIR நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 ஆகியவற்றின்படி உரிய கால அவகாசம், தனிப்பட்ட அறிவிப்பு, விசாரணை வாய்ப்பு வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

6. ECINET, ERONET தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வெளியிலுள்ள நிபுணர்களால் தடயவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மென்பொருள் கட்டுப்பாடுகள், பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், 24-06-2025 உத்தரவு தொடர்பான கோப்புகள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள், ஆணையர்களின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும்.

7. தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அதன் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகள் 2023-ஆம் ஆண்டு சட்டத்தின் 18-ஆவது பிரிவின்படி செல்லத்தக்கவையா என்பது குறித்து அரசியலமைப்பின் 143-ஆவது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும்.

8. தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல்களில் VVPAT ஒப்புகைச் சீட்டுகளை 100 விழுக்காடு எண்ணி ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.

9. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கக் குடியரசுத் தலைவர் தமது அரசியலமைப்பு அதிகாரங்களுக்குட்பட்டு தேவையான பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும்!

இந்தியத் தேர்தல் ஆணையம் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்றுள்ள நற்பெயர் எந்தவொரு தனிநபருக்கும் அல்ல; இந்திய மக்களுக்கே சொந்தமானது என்பதை மனு வலியுறுத்துகிறது. ஆணையத்தின் முடிவுகள் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதாக அதன் உறுப்பினர்களே பதிவு செய்திருக்கும் ஆட்சேபனைகளைச் சுட்டிக்காட்டி, தேர்தல் நிர்வாகம் ஆட்சியிலிருக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்புக் கொள்கையைப் பாதுகாக்க குடியரசுத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியுள்ளார்.

Also Read: “தனது துறைகளை மோசமாக நிர்வகிக்கும் நிர்மல்குமாரை பதவி நீக்கம் செய்க!” : இ.பரந்தாமன் வலியுறுத்தல்!