Politics

“போராடும் தூய்மைப் பணியாளர்களை முதல்வர் விஜய் சந்திப்பாரா?”: கேள்விகளால் துளைத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 02) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சி அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான ஒரு வாக்குறுதி, தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றோடு (செப்டம்பர் 02) சேர்த்து அவர்களுடைய போராட்டம் 15-வது நாளை எட்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக அரசின் கவனத்திற்கு நாங்கள் எடுத்து வரும்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்று இந்த அவையில் பதில் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதுவரைக்கும் சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய முதலமைச்சரை அவர்கள் நேரடியாகச் சந்தித்து தங்களின் கோரிக்கையை வைக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு இதே மாதிரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பண்ணும்போது அவர்களுடைய கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

எனவே, நாங்கள் கேட்க விரும்புவதும் அரசின் கவனத்திற்கு எடுத்து வருவதும், தூய்மைப் பணியாளர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றிக் கொடுப்பார்? தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர் அவர்கள் பேசுவாரா?

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது எங்கள் ஆட்சியில் 100 நாட்களை தாண்டிப் போராட்டம் நடைபெற்றது என்று சொன்னார்கள். இப்போது நீங்களும் 100 நாட்களைத் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா? அந்த கேள்வியை நான் கேட்க விரும்புவேன் என்றார்.

அதேபோல, எங்களுடைய ஆட்சியில் போராட்டம் நடந்தபொழுது எங்களுடைய அப்போதைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள், மேயர் பிரியா அவர்களெல்லாம் தூய்மைப் பணியாளர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு அமைச்சர் கூட அந்த போராட்டக்களத்திற்கு சென்று யாரும் அவர்களை இதுவரைக்கும் சந்திக்கவில்லை. ஆட்சியில் இல்லாத போது தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதலமைச்சர் அவர்கள், இப்போ தூய்மைப் பணியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கடைசி வரையிலும், இத்துறையின் அமைச்சரான முதல்வர் விஜய் பதிலளிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அனிதாவின் நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி மறுத்தது ஏன்?” : சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!