Politics

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!

நீட் தேர்வு மோசடிக்கு எதிராகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக இன்று (ஜூலை 26) சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் AIYF, AISF மாணவர் அமைப்பினர் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகைகள் ஏந்தியபடி ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இருப்பினும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அதே இடத்தில் அமர்ந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.

நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறிஅ அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும், பல மாணவர்கள் இறப்பிற்கு காரணமான நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது.

தொடக்கத்திலிருந்தே தமிழ்நாட்டின் பிரதானக் கோரிக்கையாக நீட் தேர்வு ரத்து என்கிற முழக்கமே தொடர்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் போராட்டமும் நடந்தது.

போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய AISF மாநில செயலாளர் தினேஷ், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் ராஜினாமா செய்தது வெற்றி என்றாலும், இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். ஆனால், இந்த நீட் தேர்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றும், மோடி அரசு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டம் அவர்களின் கோரிக்கை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை அவர்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். ஆனாலும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கை அதுவல்ல என்பதே நிதர்சனம்.

இந்திய அளவில் மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தார்மீக ரீதியாக ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், மாணவர்களின் ஒற்றுமையை ஒன்றிய பாஜக அரசுக்கு காட்ட வேண்டும் என்ற நிலையில்தான் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்தது. ஆனாலும், தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து என்ற முழக்கம் மேலோங்கித்தான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதே தொடரும் போராட்டங்களின் மூலம் வெளிப்படும் செய்தியாகும்.

Also Read: தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!